Published : 15 Jul 2023 08:00 AM
Last Updated : 15 Jul 2023 08:00 AM
தாம்பரம்: தாம்பரம் நகரின் மையப் பகுதியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது பராமரிப்பு இன்றி பொலிவிழந்த நிலையில் காணப்படும் மாநகராட்சி டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தை, நவீன வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட, நகரின் மையப்பகுதியில் கடந்த சுமார், 40 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி திருமண மண்டபம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு குறைந்த கட்டணத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நடத்தி வந்தனர். மேலும், அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள், அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என தொடர்ந்து விழாக்களும் நடந்து வந்தன.
இதையடுத்து, மண்டபத்தின் பராமரிப்பு ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பந்தம் விடப்பட்டு, தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. வாடகையாக நகராட்சி நிர்வாகத்துக்கு கணிசமான அளவில் வருவாய்கிடைத்தது. தனியார் மண்டபங்கள் தாம்பரத்தில் ரூ.1.50 லட்சம் முதல்,2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், மாநகராட்சி மண்டபத்தில் ரூ.60 ஆயிரம் மட்டுமே கட்டணம் என்பதால் மக்கள் அம்பேத்கர் மண்டபத்தையை விரும்பினர்.
இந்நிலையில் மண்டபம் முறையாக பராமரிக்கப்படதாதால் தற்போது பொழிவிழந்து, துர்நாற்றம் வீசும் இடமாக மாறி உள்ளது. பாழடைந்து வரும் மண்டபத்தை நவீன வசதிகளுடன் கூடிய புதிய மண்டபமாக மாற்றி,ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடையும் வகையில், பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. இதன்மூலம் மாநகராட்சிக்கும் வருவாய் அதிகரிக்கும்.
தாம்பரம் நகராட்சி முன்னாள் துணை தலைவர் அதிமுகவின் கோபி கூறியது: டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபம் பழைய கட்டிடத்தில் இயங்கிவந்தது. கடந்த, 2015-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரூ. 2.24 கோடி செலவில் மண்டபம் புதுப்பிக்கப்பட்டது.
புதிதாக மேற்கூரை, உயர் ரக மின் விளக்கு, குளியல் அறையுடன் கூடிய12 கழிப்பறைகள், குளிர்சாதன வசதியுடன் மணமகன், மணமகள் அறைகள் உட்பட 5சொகுசு அறைகள், வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்டவை சிறப்பாக அமைக்கப்பட்டன. மேலும் அலங்காரத்துடன் கூடியநீண்ட மணமேடை, ஒரே நேரத்தில், 200-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவு அருந்தும் உணவுக்கூடம் என பல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மண்டப பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை. கடந்த, ஆறு மாதங்களாக, மண்டப பராமரிப்பை மாநகராட்சி நிர்வாகம் பார்த்து வரும் நிலையில், அங்குள்ள சமையல் கூடங்களில் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எவ்வித வசதியையும் பயன்படுத்த முடியாத நிலையில், அனைத்துக்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாக, மக்கள் புகார் கூறுகின்றனர்.
மாநகராட்சி ஆணையர் நேரடியாக தலையிட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தீர்வு இல்லையெனில் போராட்டம் நடத்துவது தொடர்பாக கட்சி தலைமையிடம் ஆலோசித்து முடிவு எடுப்போம். இவ்வாறு கூறினார்.
சமூக ஆர்வலர் அ. ஆப்ரஹாம் கூறியதாவது: மண்டபம் இருக்கும் இடம், ஒரு காலத்தில் நாடகம் போடும் நாடக மேடை பகுதியாக இருந்தது. இங்கு எம்.ஆர்.ராதா, சுருளிராஜன், மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்களது நாடகங்களை அரங்கேற்றி உள்ளனர். திமுக ஆட்சியில் 1985-ம் ஆண்டு ஏழை, எளிய மக்களுக்காக மண்டபம் கட்டப்பட்டு, தாம்பரம் மாநகராட்சி மண்டபம் என பெயர் வைக்கப்பட்டது.
பின்னர் அதிமுக ஆட்சியில் ஜெ.ஜெ என பெயர் மாற்றப்பட்ட இந்த மண்டபம், காலப்போக்கில் திமுக ஆட்சியில் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபம் என பெயர் மாற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில் அதிக செலவு செய்து மண்டபம் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பயன்பெறும் வகையில் மாநகராட்சியின் மண்டபம் மட்டுமே உள்ளது. இந்த கட்டிடம் தற்போதைய சூழலில் நிகழ்ச்சிகள் நடத்தும் தகுதியை இழந்துவிட்டது.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மண்டபத்தை முறையாக பராமரிக்கவில்லை. கழிவறை முதல், சமையலறை உள்ளிட்ட மண்டபத்தின் அனைத்து பகுதிகளும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவே உள்ளது. ஜெனரேட்டரும் வேலை செய்யவில்லை. ஆட்சியரும்,மாநகராட்சி ஆணையரும் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏழைகளை மனதில் கொண்டு மாநகராட்சி மண்டபத்தை மேம்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், நகராட்சி மண்டபம் விரைவில் புனரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புனரமைக்கப்பட்ட பின் மண்டபத்தை பராமரிக்க தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT