Published : 14 Jul 2023 07:22 PM
Last Updated : 14 Jul 2023 07:22 PM
கோவை: 'சந்திராயன்-3' விண்கலம் ஏவப்பட்டத்தை கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் 10 பேர் இன்று (ஜூலை 14) நேரில் கண்டு ரசித்தனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 'சந்திரயான்-3' விண்கலம் இன்று மதியம் ஏவப்பட்டது. விண்கலம் ஏவப்படுவதை பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக இஸ்ரோவின் இணையதளம் மூலம் பதிவு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர்.
இதில், கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏ.ஆகாஷ், எஸ்.திலீபன், எஸ்.நந்தகிஷோர், ஆல்பிரட் ஜாக்ஸன், மிர்ஜான் அஷிதயா ஆகிய 5 மாணவர்களுடன் ஆசிரியர் பி.சக்திவேல், கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் எம்.சாந்தனு, எஸ்.ஹெப்சி, ஏஞ்சல், லத்திகா, ஸ்வீட்டி குமாரி ஆகிய 5 மாணவர்களுடன் ஆசிரியர் ஜெபலான்ஸி டெமிலாவும் பதிவு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து, விண்கலம் ஏவப்படும் நிகழ்வைக் காண நேற்று இரவு கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்றனர். அங்கிருந்து இன்று காலை வேன் மூலமாக ஸ்ரீஹரிகோட்டா சென்றடைந்தனர். அங்கு சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படும் நிகழ்வை மாணவர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணத்துக்கான போக்குவரத்து, தங்கும் வசதிக்கான செலவை 'ராக்' அமைப்பு ஏற்றுக்கொண்டது. விண்கலம் ஏவப்பட்டதை பார்வையிட்ட பிறகு மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர் ஆகாஷ், கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி சாந்தனு ஆகியோர் கூறும்போது, “விண்கலம் ஏவுவதை வீடியோவில் மட்டுமே பார்த்திருக்கிறோம். அதை நேரில் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது.
அதோடு இதற்கு முன்பு ஏவப்பட்ட ராக்கெட், செயற்கைகோள் மாதிரிகள், உதிரி பாக மாதிரிகளை அருகில் உள்ள காட்சியகத்தில் பார்வையிட்டோம். அப்போது ராக்கெட், செயற்கைக்கோள்கள் எதற்காகவெல்லாம் பயன்படுகிறது என ஆசிரியர்கள் விளக்கினர். இது எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT