Published : 14 Jul 2023 06:54 PM
Last Updated : 14 Jul 2023 06:54 PM

செந்தில் பாலாஜி வழக்கு: 6 மாத கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸ் மனு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு காவல் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக தொடக்கத்தில் இருந்து விசாரணை நடத்த வேண்டும். தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம். செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும், அதனை செயல்படுத்தாத சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், இந்த விசாரணையை முடிக்க 6 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் வெள்ளிக்கிழமை இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், கடந்த மே16ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவை சேர்ப்பதற்காக சென்னை மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், விசாரணை அதிகாரி 318 சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் இதுவரை 152 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முறைகேடு நடந்தததாக கூறப்படும் காலக்கட்டத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 2974 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த நபர்களின் பணியாணை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த காலகட்டத்தில் மாநகர போக்குவரத்து துறைக்கு 901 ஓட்டுநர்கள், 902 நடத்துனர்கள், 271 உதவிநிலை பணியாளர்கள் வேலையில் சேர்ந்துள்ளனர். அவர்களின் விவரங்களும் தீர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில் சாட்சிகளாக உள்ள பலர் தங்களது முகவரியை மாற்றி சென்றுள்ளனர். இதன்,காரணமாக அவர்களை கண்டுபிடிப்பது சவாலான காரியமாக உள்ளது. மேலும் இந்த முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் பணியாளர்கள் தேர்வு செய்த 30 மாநகர போக்குவரத்து அதிகாரிகள் யார் என்பது தொடர்பாகவும், அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலத்தையும் பெற வேண்டியுள்ளது.

அதேபோல, பணியமர்த்தப்பட்ட நபர்களை விட அதிக மதிப்பெண் பெற்ற 50 பேரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.பணியாணை வழங்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது 901 ஓட்டுநர்கள், 902 நடத்துனர்கள், 271 உதவிநிலை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டது தொடர்பான 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் முழுமையாக ஆராய வேண்டியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்கு, பணம் கொடுத்தவர்களிடம் உள்ள ஆதாரம், மின்னணு ஆதாரம், தேர்வு குழுவிடம் உள்ள மதிப்பெண் விவரம், பணியமர்த்தப்பட்டவர்கள், பணி நிராகரிக்கப்பட்டவர்களின் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை தீர ஆராய வேண்டி உள்ளது.

இவை அத்தனையும் முடித்து, விசாரணையையும் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.எனவே, இந்த நடவடிக்கைகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த இடையீட்டு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x