Published : 14 Jul 2023 05:43 PM
Last Updated : 14 Jul 2023 05:43 PM
சென்னை: முதன்முறையாக இரும்பை பயன்படுத்தி மேம்பால தூண்கள் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க பல்வேறு அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள உள்ளன.
குறிப்பாக, சென்னை மாநகராட்சி தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இந்த பாலம் ஏற்கனவே உள்ள பழைய பாலத்தின் உள்ள சாய்தளத்தை தகர்த்து புதிய பாலத்துடன் இணைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தற்போது உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீ நீளம் கொண்டது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக அமைக்கப்படவுள்ள மேம்பாலத்துடன் இணைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய மேம்பாலம் 1200 மீ நீளத்தில், 8.40 மீ அகலத்தில் ரூ.131 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தக் கட்டுமான பணிகளில் புதிய முறையை சென்னை மாநகராட்சி பயன்படுத்தி உள்ளது. இதில், பாலத்துக்கான தூண்களை இரும்பை கொண்டு அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்து சிமென்ட் கான்கிரீட் கொண்டு தான் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், முதல் முறையாக பாலங்களுக்கான தூண்களை இரும்பு கொண்டு அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்படி பாலம் அமைக்கும் போது தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தூண் மற்றும் பாலத்தை தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தூண் போன்ற வடிவமைப்பு சேலம் இரும்பு ஆலையில் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி தொடங்கும். பாலத்தின் மேல் பகுதி வழக்கும் மேல் சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மார்த்தாண்டத்தில் இது போன்ற பாலத்தை அமைத்துள்ளது. தமிழக அரசு சார்பில் இது போன்ற பாலங்கள் சென்னையில்தான் முதல் முறையாக அமைக்கப்படுகிறது" என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT