Published : 14 Jul 2023 04:50 PM
Last Updated : 14 Jul 2023 04:50 PM
சென்னை: “ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலின் 2-வது பாகம்:
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு மாநிலங்களிலும் புகார் இருக்கிறது. தமிழகத்திலும் அத்தகைய சூழல் நிலவுகிறதே?
ஆர்.என்.ரவி ஆளுநராக வந்தது முதல் தமிழகத்தில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். அவருக்குப் பலமுறை இதனை உணர்த்தியாகி விட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி விடுத்த அறிக்கையானது, ஆளுநர் ரவியின் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாக ஒழுக்க மீறல் ஆகும். ஒரு அமைச்சரை நியமிப்பதும் – அந்த அமைச்சரை நீக்குவதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர - வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.
ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால் - அவரைத் தான் நியமிப்பதாகவோ - அதனாலேயே நீக்கி விடலாம் என்றும் பொருள் அல்ல. அந்த அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் ஆளுநருக்கு இல்லை. அதனை அவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். அதனைப் போட்டு அனுப்ப வேண்டும். அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். தமிழகம் வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை.
ஆளுநர்களால் அடிக்கடி தொல்லைக்கு உள்ளாகும் மாநிலங்கள் இதனை எதிர்கொள்ள ஒரு பொதுவான வழிமுறை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ஆளுநர் பதவியையே நீக்கிவிடுவதுதான் ஒரே வழி!
நீண்ட காலமாகத் தமிழக தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக உள்ளது. தற்போது மத்திய அரசு உட்கட்டமைப்புத் திட்டங்களைப் பெரிய அளவில் முன்னெடுத்து வரும் நிலையில், இதன் அடுத்தகட்ட பாய்ச்சலில் தமிழகம் அங்கம் வகிப்பதை எவ்வாறு உறுதி செய்வீர்கள்?
தமிழகத்தினை மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும், மாபெரும் பொருளாதார மாற்றத்தை மக்களுக்கு அளிக்கும் வகையிலும் தமிழகம் அரசு புதிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப்பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.
இந்த இலக்கினை அடைந்திட, 23 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தாக வேண்டும். 46 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகின்றோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த இரண்டு ஆண்டுகளில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் முன்னேறி வந்துள்ளது.
மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கிய முன்னோடி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பிரதமர் மோடி இதை ‘இலவசக் கலாச்சாரம்’ என்றும், ‘இது பொருளாதாரத்தைப் பாதிக்கிறது’ என்றும் கூறுகிறாரே?
இரண்டு கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்தது குஜராத் பாஜக. மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று சொல்லி வாக்கு கேட்டது கர்நாடக பாஜக. ஆனால் பிரதமர் மோடி, இலவசங்களுக்கு எதிராகப் பேசுகிறார். இந்த மாநில பாஜக எல்லாம் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா? வறுமையும் மக்கள்தொகையும் அதிகமாக உள்ள நாட்டில் இலவசங்கள் தவிர்க்க முடியாதவை ஆகும். இதனை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டுள்ளது.
“தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது. ஆனால் சரியான வாக்குறுதிகள் எது, பொதுப் பணத்தைச் செலவிடுவதற்கான சரியான வழி எது என்பதுதான் எங்களது கேள்வி" என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியிருந்தார்.
''உழவர்களுக்கு மின்சாரம், விதைகள், உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை இலவசமாகக் கருதமுடியுமா? இலவச சுகாதாரச் சேவைகள், இலவச குடிநீர், நுகர்வோருக்கு இலவச மின்சாரம் ஆகியவற்றையும் இலவசமாகக் கருதமுடியுமா? மக்களின் ஊதியம், வாய்ப்புகள் போன்றவற்றில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை ஈடுசெய்ய வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டமே சொல்கிறது" என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
இல்லாத மக்களுக்கு உதவத்தான் அரசாங்கம் இருக்கிறது. இலவசமாக எதையும் தரமாட்டோம் என்று இருக்க முடியாது. ஏழைகளுக்குத் தருவதை குறை சொல்லும் பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில்தான் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இது இலவசமா? சலுகையா? உதவியா? கைம்மாறா?
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தின் வலிமைக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, உலகளாவிய சூழ்நிலை மற்றும் கோவிட் பெருந்தொற்று காரணமாக இவை பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதை எப்படி சரிசெய்யப் போகிறீர்கள்?
தொழில் துறையைப் போலவே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் மீண்டெழுந்துள்ளது. இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது. தமிழகத்தில், சுமார் 50 இலட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது நாட்டிலுள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 7.8 விழுக்காடு ஆகும். கடந்த ஆட்சியில் MSMEதுறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 607.60 கோடி இருந்த நிலையில் எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு, 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 741.96 கோடியாகவும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 1025.10 கோடியாகவும் இந்த நிதியாண்டான 2023-24 ஆம் ஆண்டில் ரூ. 1502.11 கோடியாக உயர்த்தி வழங்கியுள்ளோம்.
ஊதியம், ஓய்வூதியம், கடன்களுக்கான வட்டி ஆகியவற்றுக்காக 3.08 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இதனால், உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் வளம் சேர்க்கும் திட்டங்களுக்குச் செலவிட 45,000 கோடி ரூபாய் மட்டுமே மாநில அரசிடம் எஞ்சியிருக்கிறது. இவையன்றி, 37,540 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை இருக்கிறது. இந்த நிதிநிலை நெருக்கடியைத் தவிர்க்க மாநில அரசின் எவ்வாறு திட்டமிட்டுள்ளது?
மிக மோசமான நிதி நெருக்கடி காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தோமே தவிர, அதனைக் காரணமாகக் காட்டி எதையும் செய்யாமல் இருந்தது இல்லை. வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகையை வழங்கப் போகிறோம். ஒரு கோடி பெண்கள், மாதம் தோறும் ஆயிரம் ரூபாயை பெறப் போகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையேயான வேறுபாடு என்ன?
இரண்டுமே மக்கள் பணிதான். எதிர்க்கட்சித் தலைவராக வாதாடினேன். முதல்வராக கையெழுத்துப் போட்டு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டுகிறேன்.
காந்தி குடும்பத்தைக் குறிவைத்து வாரிசு அரசியல் என்று பிரதமர் மோடி விமர்சிக்கிறார். இதில் நியாயம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?
எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் வாரிசுகள் என்கிறார் பிரதமர் மோடி. இதெல்லாம் முப்பது ஆண்டுகளாக நான் கேட்டுக் கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டுகள். வேறு புதிதாக எதையாவது சிந்தித்துச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முதல் பகுதி > “இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு வேட்டு வைக்க பாஜக முயற்சி” - முதல்வர் ஸ்டாலின்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT