Published : 14 Jul 2023 03:52 PM
Last Updated : 14 Jul 2023 03:52 PM

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு வேட்டு வைக்க பாஜக முயற்சி” - முதல்வர் ஸ்டாலின்

பாட்னா கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசியலமைப்புச் சட்டத்துக்கு வேட்டு வைக்க பாஜக முயற்சி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனியார் ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணல்:

கடந்த ஜூன் 23 அன்று பாஜக-வுக்கு எதிரான எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றீர்கள். அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

இந்தியாவின் ஜனநாயகத்தை, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காப்பாற்ற இந்தியாவே அணி திரண்டு விட்டது என்பதைத்தான் பாட்னா கூட்டம் உணர்த்துகிறது. இவர்கள் ஒன்றாக மாட்டார்கள் என்றார்கள். ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியாது என்றார்கள். ஒத்த கருத்தை இவர்களால் எட்ட முடியாது என்றார்கள். ஒரே கூட்டத்தோடு உடைந்து விடுவார்கள் என்றார்கள். இவை அனைத்தும் பொய்யாக்கப்பட்டது. இந்தியாவின் அனைத்துத் திசைகளில் இருந்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இது என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. எங்களது அரசியல் இலக்கு நிச்சயம் வெல்லும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு நீங்கள் மையப்புள்ளியாக விளங்குகிறீர்கள். “காங்கிரஸ் இல்லாத கூட்டணி வெற்றிக்கு உதவாது” என்று முதலில் சொன்னது நீங்கள்தான்…

ஆமாம்! காங்கிரசையும் இணைத்துக் கொண்டுதான் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை நான் சொன்னேன். மூன்றாவது அணி அமைப்பது, பாஜகவுக்கு மறைமுகமாக உதவி செய்வதாக ஆகிவிடும். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் பிரிந்து இருப்பதால் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் பாஜக வீழ்ந்துவிடும். நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், எங்கள் அனைவர் இலக்கும் பாஜகவை வீழ்த்துவது ஒன்று மட்டுமே. எனவே அனைத்துக் கட்சிகளும் இந்த ஒற்றை இலக்கில் ஒன்று சேர்வார்கள். காங்கிரசுக்கும் மற்ற சில மாநிலக் கட்சிகளுக்குமான முரண்பாடு என்பது காலப் போக்கில் மறைந்துவிடும்.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நிதிஷ்குமாரின் பங்களிப்பு எத்தகையதாக இருக்கும்?

எந்த ஒன்றுக்கும் வழிநடத்திச் செல்லும் சக்தி ஒன்று தேவை. அத்தகைய சக்தியாக சகோதரர் நிதிஷ் குமார் இருக்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் அறிமுகமான முகமாகவும் இருக்கிறார். மத்திய அமைச்சராக இருந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நீண்ட காலத் தொடர்புள்ளவர் நிதிஷ். கொள்கை உறுதி கொண்ட அவர், அன்பால் அனைவரையும் அரவணைக்கக் கூடியவராகவும் இருக்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சீடர் அவர். அவர் அமைதியாக, அதே நேரத்தில் உறுதியாக இந்த அணிச்சேர்க்கையை நடத்திக் காட்டுவார் என நான் பெரிதும் நம்புகிறேன்.

நிதிஷ் குமாருக்கு இது தொடர்பாக தாங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?

சில முக்கியமான ஆலோசனைகளை பாட்னா கூட்டத்தில் அனைத்துத் தலைவர்களுக்கும் நான் சொல்லி இருக்கிறேன். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதுபோன்று எழும் பிரச்னைகளைச் சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். - என்று வரிசையாகச் சொல்லி இருக்கிறேன்.

இந்த முயற்சிகளில் மமதா பானர்ஜி பங்காற்றுவாரா? மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும் காங்கிரசும் அவருக்கு ஆதரவாக இல்லை என்ற நிலை உள்ளதே?

சகோதரி மமதா பானர்ஜி இந்த அணிச்சேர்க்கையில் மிக முக்கியமான அரசியல் தலைவராக இணைந்துள்ளார். நீங்கள் சொல்லும் முரண்பாடுகள் என்பவை மேற்கு வங்கத்தைப் பொறுத்தவை ஆகும். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் இந்தியாவை நினைத்தே மமதா முடிவெடுத்து பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்கள் சொல்லும் காங்கிரசும் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது. மமதாவும் இருந்தார்கள்.

நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

உறுதியாக! நாங்கள் நினைக்கும் அணிச்சேர்க்கை அமைந்தால் நிச்சயமாக பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா?

ஆமாம்! நடைபெறக் கூடிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை மாநிலங்களில் நிச்சயம் தோற்கும். ஏற்கனவே கர்நாடக மாநிலத் தேர்தலில் பாஜக தோற்றுள்ளது. அதுபோன்ற தோல்வியை இந்தச் சட்டமன்றத் தேர்தல்களிலும் அடைந்தால், நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் தோல்வியை அடைவோமே என்று பாஜகவுக்கு பயம் வந்துள்ளது. எனவேதான் இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தலாமா என்று யோசிப்பதாகவும் கேள்விப்படுகிறேன்.

காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள மாநிலக் கட்சிகளுடன் தாராளப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலங்களில் வலுவான கட்சிகள் இருந்தாலும், அகில இந்திய முகம் ஒன்று தேவை. அதுதான் காங்கிரஸ் கட்சியாகும். விடுதலைக்குப் பிறகு, இந்தியாவை பெரும்பாலான ஆண்டுகள் ஆண்ட கட்சி அது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களும், ஐந்தாண்டுத் திட்டங்களும் தான் சுதந்திர இந்தியாவை உருவாக்கியவை. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கான தகுதியும் மதிப்பும் வழங்கப்பட வேண்டும்.

இந்திய ஒற்றுமைப் பயணத்துக்குப் பின் ராகுல் காந்தியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ராகுல் காந்தியின் பயணம், மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் இந்தியாவின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறார்.

மத்திய அளவில் பாஜக ஆட்சி தொடர்ந்தால் அதன் தாக்கம் எவ்வாறானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அமைதி இந்தியாவை அச்சமிகு இந்தியாவாக மாற்றிவிட்டார்கள். அனைவருக்குமான இந்தியாவை ஒற்றை இந்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள். மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவில் மாநிலங்களையே சிதைக்கப் பார்க்கிறார்கள். ஒற்றை மொழி நாடாக, ஒற்றை மத நாடாக மாற்ற நினைக்கிறார்கள். ஒருவிதமான எதேச்சாதிகாரத் தன்மை கொண்ட நாடாக மாற்ற நினைக்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு வேட்டு வைக்க நினைக்கிறார்கள். மீண்டும் இவர்கள் வென்றால், இந்தியா, இந்தியாவாக இருக்காது!

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நீங்கள் ஃபரூக் அப்துல்லாவையும், மெஹபூபா முப்தியையும் சந்தித்தீர்கள். பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்பு, அங்கு நிலவும் சூழ்நிலையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

காஷ்மீரில் இப்போது இருப்பது உண்மையான அமைதி அல்ல. கையையும் காலையும் கட்டிப் போட்டு, வாயைப் பொத்திவிட்டு ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்பதைப் போன்ற அமைதிதான் அது. அரசியல் தலைவர்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு, 370-ஆவது பிரிவை நீக்கினார்கள். ஏதோ காஷ்மீருக்கு மட்டும்தான் சிறப்புரிமை இருப்பதைப் போல பரப்புரை செய்தார்கள். வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றுக்கும் சிறப்புரிமை தரப்பட்டுள்ளதே. அதை நீக்க பாஜகவால் முடியுமா? தைரியம் இருக்கிறதா? 370-ஆவது பிரிவை நீக்கியது பாஜகவின் சாதனையல்ல. சிறுபான்மை மக்கள் மனதில் விதைக்கப்பட்ட கீறல் ஆகும்.

வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு மேலும் அதிகமாகியிருக்கிறதா? அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால், பாஜக மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளுமா?

மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு தண்டனை தரத்தக்க வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சரியாக அமல்படுத்தாத வட மாநிலங்களுக்கு நிறைய மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும். தங்களுக்கு வாக்களிக்காத தென்மாநிலங்களைப் பழிவாங்க, இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள். தேர்தலில் வென்றால் அதனை அவர்கள் செய்யலாம் என நினைக்கிறார்கள்.

இது மிகப்பெரிய அரசியல் விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். தென் மாநிலங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். ஏற்கனவே, ஜி.எஸ்.டி. மூலமாக மாநிலத்தின் நிதி ஆதாரங்களை முழுமையாகப் பறித்துவிட்டார்கள். கல்வி உரிமையும் பறி போய்விட்டது. எவ்வளவுதான் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாடு செழித்தாலும் எங்கள் சம்பாத்தியம் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவிடும். இதனை சொல்வதற்கான ஒரே இடம் நாடாளுமன்றம்தான். அங்கும் நமது குரல் எடுபடாமல் போகுமானால் என்ன செய்ய முடியும்? எனவே, இதற்கான மாற்று ஏற்பாட்டை அனைத்து மாநிலக் கட்சிகளுடன் இணைந்து சிந்திக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x