Published : 14 Jul 2023 03:37 PM
Last Updated : 14 Jul 2023 03:37 PM
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே புதிதாக கட்டி வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் தரமற்று இருப்பதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அதை அப்புறப்படுத்தி விட்டு, அதே இடத்தில் மற்றொரு அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கியது.
அடித்தளம் அமைப்பதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் அடித்தளம் மற்றும் தூண்கள் சாதாரணமாகவே கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில் மிகவும் தரமற்ற முறையிலும், தரமற்ற பொருட்களை வைத்து கட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
புதிய கட்டிடத்தில் இருந்த ஜல்லி, சிமென்ட் பூச்சுகளை வெறும் கைகளால் பெயர்த்து எடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சி வைரலாகி, அரசு கட்டிடம் என்றாலே இப்படி தான் தரமற்று இருக்கும். ஆனால், குழந்தைகள் கல்வி கற்கும் அங்கன்வாடி மைய கட்டிடத்தையாவது தரமாக கட்ட வேண்டும் என்ற பதிவுகள் வேகமாக பரவி வருகின்றன.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘வளையாம்பட்டு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் குழந்தைகள் படிப்பதற்காக கட்டப்படுவதால் தரமற்ற முறையில் பொருட்களை வைத்து கட்டுவது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கட்டிட பணியை ஆய்வு செய்து, கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு தரமான பொருட்களை வைத்து புதிய கட்டிடத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், விரைவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT