Published : 14 Jul 2023 04:34 PM
Last Updated : 14 Jul 2023 04:34 PM

தென்னைய வளர்த்தா கண்ணீரா? - புலம்பும் தமிழக விவசாயிகள்

திண்டுக்கல்: தக்காளி, வெங்காயம், கத்தரி, பீன்ஸ், வெண்டை என காய்கறிகள் எல்லாம் விலையில் உச்சம் தொட்டுவரும் நிலையில், காய்த்துக் குலுங்கியும் விவசாயிகளுக்குக் கைகொடுக்காத நிலையில் தேங்காய் விலை உள்ளது.

கடந்த ஒரு மாதமாக காய்கறிகள் விலை போட்டிபோட்டுக்கொண்டு ஏறுமுகமாக உள்ளன. இதில் தக்காளி, வெங்காயம் இடையே விலையில் போட்டி நிலவுகிறது என்றே சொல்லலாம். இரண்டும் சதமடித்தும் உயர்ந்துகொண்டுள்ளன. பிற காய்கறிகளும் விலையில் உச்சத்தைத் தொட்டு வருகின்றன. அதநேரம், தேங்காய் விலையை நினைத்து விவசாயிகள் கண்ணீர்விடும் நிலைதான் இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், அய்யம்பாளையம், வத்தலகுண்டு, பழநி, ஆயக்குடி, விருப்பாட்சி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக அதிக பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் அறுவடைசெய்யப்படும் தேங்காய்கள் தமிழகத்தின் பிறபகுதிகள் மட்டுமின்றி, வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக காய்கறிகள் விலை வெகுவாக உயர்ந்தநிலையில், தேங்காய் மட்டும் தொடர்ந்து இறங்கு முகத்தைக் கண்டு விலையில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. தற்போது விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலைக்கு விற்பனையாகிறது. இதற்கு காரணம் கடந்த நான்கு ஆண்டுகளாக நல்லமழை பெய்தது. இதனால் தென்னை விளைச்சல் அதிகரிக்கத் தொடங்கியது.

காய்கள் அறுவடை தொடங்கிய நிலையில் காய்த்துகுலுங்கிய தேங்காய்களால் வரத்து அதிகரித்ததுதான் விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என விவசாயிகளும், வியாபாரிகளும் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ராமசாமி கூறியதாவது: தென்னை விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு தேங்காய் வரத்து அதிகரித்ததால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போய்விட்டது. விவசாயிக்கு ஒரு தேங்காயைப் பறிக்கும் கூலி, மட்டையை உறிக்கும் கூலி, அதை சந்தைக்குக் கொண்டு செல்லும் செலவு என மொத்தம் ரூ.3 செலவாகிறது.

மரத்தைப் பராமரிக்கும் பணிக்கு ஒரு தேங்காய்க்கு ரூ.3 வரை என ரூ.6 வரை செலவாகிறது. செலவுபோக ஒரு தேங்காய்க்கு இரண்டு ரூபாய் கூடுதலாக வைத்தாலும் ரூ.8-க்கு மேல் விற்றால்தான் விவசாயிக்கு லாபம் கிடைக்கும். ஆனால், தற்போது ஒரு தேங்காயை விவசாயிகளிடம் ரூ.4-க்கு கொள்முதல் செய்கின்றனர் வியாபாரிகள். இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர்.

தென்னை விவசாயிகளை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு கூட்டுறவு சங்கம் மூலம் தேங்காய் ஒரு கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்கிறது. கேரள அரசு போல் தமிழக அரசும் விவசாயிகளிடம் தேங்காயைக் கொள்முதல் செய்யவேண்டும். அப்போதுதான் தென்னை விவசாயிகளைக் காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகரிக்க வாய்ப்பில்லை: தேங்காயை வடமாநிலங்களுக்கு அனுப்பும் வியாபாரி லூக்காஸ் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்று அதிக வரத்து ஏற்பட்டு விலை வீழ்ச்சியடைந்தது தற்போதுதான். மழைப் பொழிவு அதிகம் காரணமாக விளைச்சல் அதிகரித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி காரணமாக தென்னை விளைச்சல் குறைந்த நிலையில் விவசாயிகளிடம் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.14 வரை வாங்கியுள்ளோம். ஒரு தேங்காய் ரூ.8-க்கு மேல் விற்பனையானால்தான் விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும்.

தற்போது ரூ.4-க்குப் பெறும் நிலை. இதனால் விவசாயிகளுக்கு இழப்புதான். வரத்துக் குறைந்தால்தான் தேங்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது அறுவடை செய்யப்பட்ட தேங்காய்கள், விற்பனைக்கு அனுப்பமுடியாமல் தேங்கிக்கிடக்கின்றன. இந்த நிலை இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் வரை தொடரும் என்றே தெரிகிறது. இதனால் இப்போதைக்கு தேங்காய் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை, என்று கூறினார்.

எண்ணெய்க்கு ஜிஎஸ்டி கூடாது: தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைக்க வலியுறுத்தி, மாநிலத்தின் பல பகுதிகளில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் தென்னை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு ஓராண்டுக்கு 900 கிலோ வரை கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும். உரித்த தேங்காயை அரசே ஒரு கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து தென்னை மரங்களுக்கும் பயிர் இன்சூரன்ஸ் வழங்கிட வேண்டும்.

அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் முழு மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் உருவாக்க வேண்டும். தேங்காய் எண்ணையை அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் எண்ணைய்க்கு ஜி.எஸ்.டி.-யை ரத்து செய்ய வேண்டும், என விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x