Published : 14 Jul 2023 08:05 PM
Last Updated : 14 Jul 2023 08:05 PM

கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத இழப்பீடு: உயர்மின் கோபுரத்துக்கு நிலம் தந்த ஈரோடு விவசாயிகள் வேதனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை பவர்கிரிட் நிறுவனம் வழங்கியும், ஈரோடு மாவட்ட நிர்வாகம், விவசாயிகளுக்கு வழங்காமல் தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களில்,‘பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் மூலம், சத்தீஸ்கர் மாநிலம் ரெய்காரிலிருந்து, தமிழகத்தில் புகளூர் (திருப்பூர் மாவட்டம்) வரை செல்லும் 800 ஹெச்.வி.டி.சி. உயரழுத்த மின் பாதை அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, ‘உயர் மின்கோபுரம் அமையவுள்ள இடத்தில் உள்ள நிலங்களுக்கு, நில மதிப்பில் 85 சதவீத தொகையும், மின்கம்பிகள் (மின்பாதை) செல்லும் நிலங்களுக்கு நில மதிப்பில் 15 சதவீத தொகையும் வழங்கப்படும். விவசாய நிலங்களில் உள்ள தென்னை, தேக்கு, மா, பலா உள்ளிட்ட அனைத்து வகை மரங்களுக்கும், வாழை, மஞ்சள், நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட அனைத்து வகைப் பயிர்களுக்கும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்’ என ஈரோடு மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. உயர்மின் கோபுரம் அமைந்த இதர மாவட்டங்களில், இழப்பீட்டு தொகையை பவர்கிரிட் நிறுவனம் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கியது.

ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அப்போதைய ஆட்சியர் கதிரவனின் முயற்சியால், பவர் கிரிட் நிறுவனத்தினரிடம் இருந்து, இழப்பீட்டு தொகையை வருவாய்த்துறையினர் பெற்று, அது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதனால், போராட்டங்கள் வலுவிழந்து, திட்டம் நிறைவேறியது. ஆனால், உயர்மின்கோபுரம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையில் முரண்பாடு, அறிவிக்கப்பட்ட தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இன்று வரை தொடர்ந்து வருகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து, உயர் மின் கோபுரத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப்படும்போது, பாதிக்கப்பட்ட தென்னை மரத்துக்கு ரூ.36 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, தென்னை மரத்திற்கு ரூ.32 ஆயிரத்து 280 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உயர்மின் கோபுர பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 8,500 தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு, திட்டம் நிறைவேறிய பிறகும் நியாயமான இழப்பீடு கிடைக்கவில்லை.

இத்துடன், ஈரோடு ஆட்சியராக கதிரவன் பணியாற்றியபோது, மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, ரூ.2.70 கோடி பவர்கிரிட் நிறுவனத்திடம் இருந்து மாவட்ட வருவாய்த்துறை பெற்றது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் இந்த தொகை விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்படவில்லை.

விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை, ஈரோடு வருவாய்த்துறை கணக்கில் இருக்கும் நிலையில், அதை தங்களுக்கே திரும்ப கொடுக்க வேண்டும் என பவர்கிரிட் நிறுவனம் தற்போது கேட்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தொகை திரும்பச் சென்று விட்டால், மாவட்ட நிர்வாகத்தின் வாக்குறுதியை நம்பி, நிலம் வழங்கிய விவசாயிகளுக்குச் சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை பறிபோய் விடும். எனவே, தாமதமின்றி இழப்பீட்டுத் தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியின் போது, ஈரோடு மாவட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால், அப்போதைய மாவட்ட நிர்வாகம், பவர்கிரிட் நிறுவனத்திடம் இழப்பீடு பெற்று விவசாயிகளுக்கு வழங்கியது. ஈரோடு மாவட்டத்தில், உயர்மின் கோபுரத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. ஒருசிலர் மட்டும் கூடுதல் இழப்பீடு கேட்டு முறையீடு செய்துள்ளனர். அவர்களது மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ-விற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x