Published : 14 Jul 2023 01:47 PM
Last Updated : 14 Jul 2023 01:47 PM
மாஸ்கோ: உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுதங்களால் போரின் போக்கு மாறப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு சமீபத்தில் நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வில்னியஸ் மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள புதின், “நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராவதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அதே வேளையில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குவது என்பது உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரித்து மோதலை நீட்டிக்கும்” என குற்றம் சாட்டினார்.
250 கிமீ (155 மைல்கள்) பயணிக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் முடிவுச் செய்துள்ளது. இதுகுறித்து புதின் பேசும்போது, “அந்த ஆயுதங்கள் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை போரின் போக்கை மாற்ற போவதில்லை” என்று தெரிவித்துள்ளார். நேட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “ புதின் உக்ரைன் போரில் தோற்றுவிட்டார்” என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இந்த கருத்தை அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம், உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு வழங்குவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், எப்போது நேட்டோவில் உக்ரைன் இணையும் என்பது குறித்து நேட்டோ தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, பனிப்போர் காலத் திட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் திரும்பியுள்ளன என்பதை இந்த மாநாடு நிரூபிக்கிறது என்று விமர்சித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT