Published : 14 Jul 2023 09:10 AM
Last Updated : 14 Jul 2023 09:10 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 37 வார்டுகளில் பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்ட தேனம்பாக்கம், செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு கிடையாது.
இப்பகுதிகளில் திறந்தவெளி வாய்க்கால்கள் மூலமாகவே கழிவுநீர் செல்கிறது. இது ஒருபுறம் இருக்க, பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ள 37 வார்டுகளில்கூட கிருஷ்ணன் தெரு, தாத்திமேடு, பாண்டவப் பெருமாள் கோயில் தெரு, ஏகாம்பரநாதர் சந்நிதி தெரு, மாகாளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் அவ்வப்போது வெளியேறி சாலையில் ஓடுகிறது.
இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகள், பணிக்கு செல்பவர்கள், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உட்பட பலரும் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அடைப்புகள் ஏற்படுவதும், நாள்கணக்கில் கழிவுநீர் சாலையில் ஓடுவதும், இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. தவிர, இதை சரிசெய்வதற்காக அவ்வப்போது சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன் கூறியதாவது: இந்த பாதாள சாக்கடை 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அப்போது காஞ்சிபுரம் நகரின் மக்கள்தொகை 2 லட்சம்கூட இருக்காது. இப்போது மாநகராட்சியாக மாறியுள்ளது. 5 லட்சம் பேர்வசிக்கின்றனர். அவ்வளவு கழிவுகளை தாங்கும் திறன் பாதாள சாக்கடை குழாய்களுக்கு இல்லை.
மேலும், திருமண மண்டபம் போன்ற இடங்களில் கழிவுநீருடன் வேறு பல கழிவுகளும் பாதாள சாக்கடையில் விடப்படுகின்றன. இதனால், அடைப்பு ஏற்படுகிறது. பாதாள சாக்கடைக்கான கழிவுநீர் உந்துசக்தி நிலையங்கள் சரிவர வேலை செய்யாததும் இந்த அடைப்புக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகளில் இருந்து பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுக்கும்போது, வடிகட்டிகள் பொருத்த அறிவுறுத்த வேண்டும். முறையான இணைப்பு கொடுப்பவர்களை மட்டுமே இவ்வாறு வலியுறுத்த முடியும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. இவற்றில் சுமார் 16 ஆயிரம் இணைப்புகள் மட்டுமேஅனுமதி பெற்றவை. எனவே, அனுமதி பெறாத இணைப்புகளை முதலில் முறைப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் எல்லா வீடுகள், வணிக நிறுவனங்களிலும் வடிகட்டிகளை பொருத்த அறிவிப்பு கொடுப்பதுடன், இதை கண்காணிக்கவும் முடியும் என்றும் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சியின் தலைமை பொறியாளர் கணேசனிடம் கேட்டபோது, ‘‘பாதாள சாக்கடைக்குள் தேவையற்ற குப்பைகள், பொருட்கள் செல்வதால்தான் அடைப்பு ஏற்படுகிறது. எனவே, வடிகட்டிகளை பொருத்துமாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து வருகிறோம். ஓரிடத்தில் கழிவுநீர் வெளியேறுகிறது என்றால், அங்குதான் அடைப்பு உள்ளது என்று அர்த்தம் இல்லை. வேறு எங்காவது அடைப்பு இருந்து கழிவுநீர் சரிவர செல்லாவிட்டால்கூட, தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் வெளியேறும்.
எங்கு அடைப்பு உள்ளது என்பதை கண்டறிவதில் சிரமம் உள்ளது. அதனால்தான், சரிசெய்வதில் தாமதம் ஏற்படுகிறது. வீடுகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் வடிகட்டிகள் பொருத்தினாலே இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். அனுமதி இல்லாமல் கொடுக்கப்பட்ட இணைப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கழிவுநீர் உந்துசக்தி நிலையங்களை முறையாக பராமரித்து வருகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT