Published : 14 Jul 2023 09:01 AM
Last Updated : 14 Jul 2023 09:01 AM
காஞ்சிபுரம்: திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு 59 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதால், பெற்றோர், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட விரைவாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது.
இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இப்பள்ளி கடந்த 2007-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பழைய கட்டிடங்களில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. புதிய உயர்நிலைப் பள்ளிக்கு அதே பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தின் கரையில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இப்பள்ளியில், தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். எனினும், குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ளதால் உயர்நிலைப் பள்ளி கட்டிடங்களை விரிவுபடுத்த முடியவில்லை. இதனால், இடநெருக்கடியுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு மாவட்டவருவாய் அலுவலர் இப்பள்ளிக்கு நிலம் தேர்வு செய்வதற்காக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பெரும்பாலும் நீர்நிலைகளை ஒட்டியே நிலங்கள் இருந்ததால், பள்ளிக்கு ஏற்றதாக அமையவில்லை.
இதனால், மாணவர்கள் தொடர்ந்து இடநெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், திருக்காலிமேடு குறுக்கு கவரைத்தெரு பகுதியில் சுமார் 60 சென்ட் அனாதீன நிலம் கண்டறியப்பட்டு, அதை பள்ளிக்கு ஒதுக்க வேண்டும் என்று கல்வித் துறை சார்பில் வருவாய் துறைக்கு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிலத்தை தேர்வு செய்யும் பணிகளை வருவாய் துறை தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து கடந்த பிப்.13-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவாய் துறை மூலம் கண்டறியப்பட்ட 59 சென்ட் நிலத்தை, உயர்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதியினர் கூறியதாவது: திருக்காலிமேடு கோபி: தினமும் காலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும்போது, மாணவர்கள் அனைவரையும் ஒருசேர நிற்கவைக்ககூட இடம் இல்லை. மாணவர்கள் தாராளமாக உட்காரக்கூட முடியாது. ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டுதான் அமர வேண்டியநிலை உள்ளது.
பள்ளியில் இடநெருக்கடி இருப்பதால், வகுப்பு இடைவேளையின்போது, பள்ளியைவிட்டு வெளியே செல்லும் மாணவர்கள், சாலைகளில் ஆபத்தான முறையில் சுற்றித்திரியும் நிலை உள்ளது. தற்போது பள்ளிக்கு நிலம் ஒதுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலத்தில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு விரைவாக நிதி ஒதுக்க, கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் மாணவர் ஞானமூர்த்தி: ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், உள்ளூர் மாணவர்கள் வேறு பள்ளியை நாடிச் செல்லும் நிலை உள்ளது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது மற்றும் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் தீவிர முயற்சியால், உயர்நிலைப் பள்ளிக்கு நிலம் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் கூறியபோது, ‘‘திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 59 சென்ட்நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் பெறப்பட்டதும், நபார்டு திட்டத்தின் கீழ் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT