Published : 14 Jul 2023 06:01 AM
Last Updated : 14 Jul 2023 06:01 AM

ரூ.16.49 கோடியில் மகளிர் விடுதி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: செங்கல்பட்டு, திருச்சியில் ரூ.16.49 கோடி மதிப்பிலான மகளிர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் கிராமங்கள், சிறு நகரங்களில் இருந்து பெருநகரங்களுக்கு பணிநிமித்தம் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அவ்வாறு பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டைவிட்டு வந்து, வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்துக்கு அருகில் தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதிகள் கிடைப்பது அவசியத் தேவையாக உள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் தேவைகளை உணர்ந்த தமிழக அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான, பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து வருகிறது.

பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்க ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ அரசால் அமைக்கப்பட்டு, புதிய விடுதிகளைக் கட்டுதல், பழைய விடுதிகளைப் புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில்கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ரூ.7.45 கோடி, திருச்சியில் ரூ.5.66 கோடி என மொத்தம் ரூ.13 கோடியில், 226 மகளிர் தங்கும் வகையில், 2 புதிய பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

மேலும், சென்னை அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய 7 இடங்களில் ரூ. 3.43 கோடியில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட விடுதிக் கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.

உடனடியாக பயன்பாட்டுக்குவரும் இந்த விடுதிகளில் தங்குவதற்கு www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன், சமூக நலத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஆணையர் வே.அமுதவல்லி, கூடுதல் இயக்குநர் ச.ப.கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x