Published : 14 Jul 2023 06:08 AM
Last Updated : 14 Jul 2023 06:08 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் செப்.15-க்குள் அனைத்து கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து கால்வாய்களையும் செப்.15-ம் தேதிக்குள் தூர்வாரி, ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

நீர்வளத் துறையின் சென்னை மண்டலப் பணிகள் குறித்து அனைத்து நீர்வளத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் பேசியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவமழை முன்னேற்பாடுகளுக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, செப்.15-ம் தேதி அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களையும் தூர்வாரி, ஆகாயத்தாமரைகளை அகற்றி தங்கு தடையின்றி நீர் செல்ல வழியேற்படுத்த வேண்டும்.

மேலும், நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகள், நீர்வள, நிலவள திட்டப் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

மேலும், கடந்தாண்டு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.434 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் போரூர் ஏரி உபரிநீர் கால்வாய், அடையாறு ஆற்றை அகலப்படுத்தும் பணி, கொசஸ்தலை ஆற்றின் வெள்ளக்கரை அமைக்கும் பணி, சென்னை மாநகர முக்கிய ஏரிகளில் நீர் ஒழுங்கிகள் அமைக்கும் பணிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, செம்மஞ்சேரி பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தார்.

இதுதவிர, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் மேம்படுத்தும் பணி, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மாதவரம் ரெட்டை ஏரியில் நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா, கூடுதல் செயலர் எஸ்.மலர்விழி, நீர்வளத் துறை சிறப்பு செயலர் கா.முருகன், முதன்மை தலைமைப் பொறியாளர் ஏ.முத்தையா, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கே.அசோகன், திட்ட உருவாக்க தலைமை பொறியாளர் ஜி.பொன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x