Published : 14 Jul 2023 09:19 AM
Last Updated : 14 Jul 2023 09:19 AM
சென்னை: பொருளாதாரக் குற்றப் பிரிவில் நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
`முதல்வரின் முகவரி துறை' செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திமுக அரசு தொலைநோக்குடன் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், மக்களின் அன்றாடத் தேவைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது முக்கியமாகும்.
அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு துறையின் பொறுப்பாகும். மாவட்ட, மாநில அளவில் பெறப்படும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படாததால்தான், முதல்வரின் முகவரி துறைக்கு பொதுமக்கள் மனுக்களை அனுப்புகின்றனர்.
காவல், வருவாய்த் துறைகள் தொடர்பாக அதிக மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த துறைகளின் சேவைகள் மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே இதற்கு முக்கியக் காரணம். அரசின் சேவைகள், சான்றிதழ்களை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வழங்க வேண்டும். பட்டா கோரும் மனுக்களில் இடைநிலை பதில்கள் வழங்காமல், மனுதாரரை விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகளில் நிலஎடுப்பு செய்யப்பட்ட நிலங்களில், தனிப் பிரிவு மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சிறப்பு முகாம்கள்: பட்டா மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை, சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள் ஆகியோர் விரைவாக விசாரணை நடத்தி, தீர்வுகாண வேண்டும். சான்றிதழ்கள் நிராகரிக்கப்படும்போது, உயர் அலுவலர்களுக்கு மேல்முறையீடு செய்ய இ-சேவைகளில் உரிய வசதி ஏற்படுத்த வேண்டும். சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள், சான்றிதழ் முகாம்கள் நடத்த வேண்டும்.
அரசு அலுவலகங்கள் மக்கள் எளிதில் அணுகி, சேவைகள் பெறும்இடமாக இருக்க வேண்டும். தாமதங்கள், வீண் அலைக்கழிப்புகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
காவல்துறை மனுக்களைப் பொறுத்தவரை, பண மோசடி, குடும்பப் பிரச்சனை, வாடகைதாரர் பிரச்சினை மற்றும் நிலப் பிரச்சினைகள் அதிகம் உள்ளன. மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பி-க்கள், முதல்வரின் தனிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தபோதிலும், மனுக்கள் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பிரிவு காவலர்களாலேயே கையாளப்படுவதாகத் தெரிகிறது. இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
உள்ளூர் காவல் நிலையங்களில் முறையான விசாரணை நடக்காததால்தான், மக்கள் முதல்வரின் தனிப்பிரிவை நாடுகின்றனர். எனவே, காவல் நிலையங்களில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
நீதிமன்றம் மூலம் தீர்வுகாண வேண்டுமென்றால், எழுத்துப்பூர்வ அறிவுரை வழங்க வேண்டும். பொருளாதாரக் குற்றங்களால்தான் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பொருளாதாரக் குற்றப் பிரிவில் நுண்ணறிவுப் பிரிவைத் தொடங்கி, ஒரு நிறுவனம் தொடங்கும்போதே, அது முறையானதுதானா என்பதை அறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களிடமும் தொடர்ந்துவிழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
முதல்வர் மனுக்கள் மேளா: குறிப்பிட்ட இடைவெளியில் முதல்வர் மனுக்கள் மேளா நடத்தவும், விவசாரணையில் திருப்தி இல்லாதவர்களின் மனுக்களை, அதிகாரிகள் நேரடியாக விசாரணை செய்து, உரிய தீர்வுகாணவும் முன்வர வேண்டும்.
அதிக மனுக்களுக்குத் தீர்வுகாண்பது நோக்கம் அல்ல. நியாயமான தீர்வுகளும், மக்கள்திருப்தியுமே அரசின் குறிக்கோள். உதவி ஆய்வாளர், ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் முறையான, நியாயமான விசாரணை மட்டுமே, மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும். இதை மனதில் கொண்டு, அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். சார்நிலை அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்க வேண்டும்.
எனவே, தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர், முதல்வரின் முகவரி துறைக்கு அனுப்பப்படும் மனுக்கள் மீது முறையாக, விரைவாகத் தீர்வு காணப்படுகிறதா என்பதை தங்களது மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களில் ஆய்வுசெய்ய வேண்டும். அனைத்து துறைச் செயலர்கள், ஆட்சியர்களும் மனுக்களை கவனமாக ஆய்வுசெய்து, உரிய தீர்வு காணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT