Published : 14 Jul 2023 09:54 AM
Last Updated : 14 Jul 2023 09:54 AM
சென்னை: ஜெருசலேம் யாத்திரை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆட்சிக்கு வந்தவுடன், நீண்டநாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வரும், திமுகவினரும் உறுதியளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து 26 மாதங்களாகியும், இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிறிஸ்தவவர்கள் ஜெருசலேம் புனித யாத்திரை மேற்கொள்ள நிதியுதவி வழங்கும்திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். அதன்படி, ஆண்டுதோறும் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 500-ஆக இருந்ததை, 2019-ல் எனது தலைமையிலான அதிமுக அரசு 600-ஆக உயர்த்தியது.
இதில், கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2019-ம் ஆண்டுவரை இந்த திட்டத்தின்கீழ் 4,128 கிறிஸ்தவர்கள், ரூ.8.25 கோடியில் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், புனிதப் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 26 மாதங்கள் முடிவடைந்த நிலையில், ஜெரு சலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு இதுவரை நிதியுதவி வழங்கப்படவில்லை.
அதிமுக அரசு கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா கண்ட திமுக அரசு, சிறுபான்மையின மக்களுக்காக ஜெயலலிதா தொடங்கி வைத்த ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவியையும் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே, கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் யாத்திரை செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். தங்களைக் கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்று கருதி, மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் தமிழக முதல்வருக்கு, அவரால் ஏமாற்றப்பட்ட சிறுபான்மை மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT