Published : 14 Jul 2023 05:47 AM
Last Updated : 14 Jul 2023 05:47 AM

தென்காசி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை: காங்கிரஸ் வெற்றிபெற்றது உறுதியானது

உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று நடைபெற்ற தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான துரை.ரவிச்சந்திரன்.

தென்காசி: உயர் நீதிமன்ற உத்தரவின்படி தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றது உறுதி செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் 18 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பழனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் 87,706 வாக்குகள், 1,609 தபால் வாக்குகள் என மொத்தம் 89,315 வாக்குகள் பெற்று வென்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏவான அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் 88,271
வாக்குகள், தபால் மூலம் 674 வாக்குகள் என மொத்தம் 88,945 வாக்குகள் பெற்று, 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. இத்தேர்தலில் மொத்தம் பதிவான 2,971 தபால் வாக்குகளில், 382 வாக்குகள் செல்லாதவை எனவும், 13 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானதாகவும் அறிவிக்கப்பட்டு, எஞ்சிய 2,576 வாக்குகள் எண்ணப்பட்டன.

தபால் வாக்குகளை எண்ணும்போது குளறுபடிகள் நடந்ததாகவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. கோட்டாட்சியர் லாவண்யா முன்னிலையில் ஊழியர்கள் தபால் வாக்குகளைப் பிரித்து எண்ணினர். மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் இப்பணியை ஆய்வு செய்தார். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளர் மற்றும் ஒரு முகவர் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

‘தபால் வாக்கு உறை, வாக்குச் சீட்டு, தெளிவுபடுத்தும் படிவம் ஆகியவற்றை காட்ட வேண்டும்’ என்று அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள், வாக்குச் சீட்டை மட்டும் காட்டுவதாகக் கூறினர். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்ட விதிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தாமதத்துக்கு பின்னர் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நேற்று இரவிலும் வாக்கு எண்ணும் பணி நீடித்தது. வாக்கு எண்ணிக்கை முடிவை அறிந்துகொள்ள காங்கிரஸ், அதிமுக தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

வாக்குகள் விவரம்: நேற்று இரவு 8 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி காங்கிரஸ் 1,606 வாக்குகளும், அதிமுக 673 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றது உறுதி செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x