Published : 14 Jul 2023 05:27 AM
Last Updated : 14 Jul 2023 05:27 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள 45 அரசு ஐடிஐ.க்களில் ரூ.1,559.25 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘தொழில் 4.0’ தொழில்நுட்ப மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) தொழிலாளர் நலத்துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு ஐடிஐ.க்களில் தற்போது ஃபிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், வெல்டர், ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெறவேண்டும். இந்த நோக்கத்தில் தமிழக அரசு 71 அரசு ஐடிஐ.க்களை ரூ.2,877.43 கோடியில் ‘தொழில் 4.0’ தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிட்டது.
அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ‘தொழில் 4.0’ தரத்திலான தொழில்நுட்ப மையங்களை உருவாக்க தமிழக அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இதன் முதற்கட்டமாக, கடந்த ஜூன் 8-ம் தேதி ஒரகடத்தில் உள்ள அரசு ஐடிஐயில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 அரசு ஐடிஐ.க்களில் அமைக்கப்பட்டுள்ள ‘தொழில் 4.0’ தொழில்நுட்ப மையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையிலான 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 87.5:12.5 என்ற விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும், தமிழக அரசும் முதலீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.
அதன் தொடர்ச்சியாக, 2-ம் கட்டமாக செங்கல்பட்டு - பெரும்பாக்கம், வேலூர், திருப்பத்தூர் - வாணியம்பாடி, கோயம்புத்தூர், திருப்பூர் – உடுமலைப்பேட்டை, ராமநாதபுரம் - ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கிருஷ்ணகிரி – ஓசூர், கன்னியாகுமரி – நாகர்கோவில், தூத்துக்குடி – திருச்செந்தூர், நாகலாபுரம், வேப்பலோடை, திருநெல்வேலி – ராதாபுரம், புதுக்கோட்டை – புதுக்கோட்டை, விராலிமலை, அரியலூர் – அரியலூர், ஆண்டிமடம், கள்ளக்குறிச்சி – சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, நாகப்பட்டினம் – நாகப்பட்டினம், செம்போடை, திருக்குவளை, திருவாரூர் – நீடாமங்கலம், கோட்டூர், சென்னை – கிண்டி, வடசென்னை, அம்பத்தூர், தென்காசி – தென்காசி, கடையநல்லூர், தஞ்சாவூர் – தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, சிவகங்கை – சிவகங்கை, காரைக்குடி, சேலம் – மேட்டூர் அணை, கருமந்துரை, திருவண்ணாமலை – திருவண்ணாமலை, ஜமுனாமரத்தூர், ஈரோடு - கோபிசெட்டிபாளையம், தருமபுரி – தருமபுரி, பெரம்பலூர் – பெரம்பலூர், ஆலத்தூர், கடலூர் – நெய்வேலி, காட்டுமன்னார்கோயில், ஆகிய 45 அரசு ஐடிஐ.க்களில் ரூ.1,559.25 கோடி செலவில் ‘தொழில் 4.0’ தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். இதன்மூலம் அரசு ஐடிஐ.க்களில் ஆண்டுதோறும் 5,140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், பி.கீதா ஜீவன், சி.வி.கணேசன், தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT