Published : 14 Jul 2023 04:23 AM
Last Updated : 14 Jul 2023 04:23 AM
சென்னை: பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பன்முக சமூக கட்டமைப்புக்கு பெயர்பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறேன். சில சீர்திருத்தங்களின் அவசியத்தை உணர்கிறேன். அதேநேரம், பொது சிவில் சட்டம் கடும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி மதச்சார்பின்மை. அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறை
கள் அடிப்படையாக உள்ளன. மத சமூகங்களின் ஒப்புதல் இன்றி அந்த தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஒரே மதத்தை பின்பற்றும் மக்களிடம்கூட, இடம், வட்டார அளவில் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் வேறுபடுகின்றன. அவர்களிடம் ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியம் இல்லை.
கடந்த 2018 ஆக.31-ம் தேதியிட்ட எனது அறிக்கையை விவாதிப்பதற்காக சமீபத்தில் கூடிய 21-வது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளது. தவிர, அவசர கதியில் அறிமுகம் செய்வது அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளுக்கு முரணாக அமைவதுடன், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மை, குழப்பத்துக்கு வழிவகுக்கும்.
சிறுபான்மை சமூகங்களுக்கு சில பாதுகாப்பு, உரிமைகளை தனிநபர் சட்டங்கள் வழங்குகின்றன. பொது சிவில் சட்டம் செயல்படுத்தும் முயற்சியானது, பழங்குடியினர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் தனித்த மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, ஒரேமாதிரி பெரும்பான்மை சமூகத்தை உருவாக்கும் முயற்சியாக கருதுகிறேன்.
வேற்றுமையில் ஒற்றுமைக்கும், கலாச்சார பன்முகத்தன்மைக்கும் பெயர்பெற்ற இந்தியாவில், பொது சிவில் சட்டத்தை திணிக்க முயற்சிப்பதன் மூலம், இந்த பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படும். பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் தனித்துவ மரபு, சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம்.
இச்சட்டம், பல்வேறு மத சமூகங்கள் இடையே ஆழமான பிளவுகளையும், சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் ஆற்றல் கொண்டது. மத நல்லிணக்கம் கொண்ட இந்த நாட்டில், முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கும் ஒரே வகையான சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக்களிடையே பரஸ்பர புரிதலையும், மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம். பொது சிவில் சட்டம் இயல்பிலேயே, பழங்குடி சமூகங்களை அதிகமாக பாதிப்பதுடன், அவர்களது பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், உரிமைகளை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொள்ளாமல், ஒரேமாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரி அணுகுமுறை, தற்போது உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கக்கூடும். பல்வேறு சமூகங்கள் இடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஒரேமாதிரி சட்டத்தை திணிப்பதற்கு பதிலாக, மதங்களுக்கு இடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவது, சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம்.
இச்சட்டம் தொடர்பாக மாநில அரசுகள், மதத் தலைவர்கள், சமூக பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படவில்லை. இந்த நடவடிக்கைதான் அனைவ
ராலும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை எட்ட முக்கியமானது. எனவே, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT