Published : 13 Jul 2023 07:47 PM
Last Updated : 13 Jul 2023 07:47 PM
திண்டுக்கல்: கொடைக்கானலில் பூம்பாறை ஆறு பகுதியில் தரைப்பாலம் உடைந்ததால் ஆபத்தான முறையில் அப்பகுதி அம்மக்கள் ஆற்றை கடந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி அடிசரை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலே விவசாயம்தான்.
இக்கிராமத்துக்கு செல்லும் வழியில் பூம்பாறை ஆறு உள்ளது. இந்த ஆற்றைக் கடப்பதற்கு வசதியாக, கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த செலவில் 6 மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்தனர். இந்த பாலம் வழியாக நாள்தோறும் சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 12) பெய்த கனமழையில் பூம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால், கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். மழை நின்ற பிறகும், ஆற்றில் நீர் வரத்து குறையாததால் கிராம மக்கள் வேறு வழியின்றி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
மேலும், தரைப்பாலம் சேதமடைந்ததால் விளைபொருட்களை வாகனங்களில் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்லை என்ற குற்றச்சாட்டையும் அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர். மேலும், இப்பகுதியில் நிரந்தரப் பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT