Published : 13 Jul 2023 07:16 PM
Last Updated : 13 Jul 2023 07:16 PM

வெளிநாடுகளில் கள ஆய்வு: திடக்கழிவு மேலாண்மைக்காக முதல்வரிடம் மேயர் பிரியா அளித்த 9 பரிந்துரைகள்

முதல்வரிடம் அறிக்கை அளித்த மேயர் பிரியா

சென்னை: வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு, திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக 9 பரிந்துரைகளை முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் தினமும் 52 லட்சம் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. அதில், மக்கும், மக்காத குப்பை தரம் பிரிவிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும், பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு, சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தி வரும் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில், ‘பயோ மைனிங்’ முறையில் குப்பை அகற்றப்பட்டு நிலம் மீட்கும் பணிகளையும் மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் குப்பை கையாளுவதை தெரிந்து கொள்வதற்காக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் குழு சமீபத்தில் அந்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது, அந்நாடுகளில் உள்ள குப்பைத் தொட்டிகள், சேகரிக்கப்படும் குப்பையை கையாளும் விதம், கடற்கரைப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள சுகாதாரம் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்தனர்.

அதுகுறித்த அறிக்கையை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இன்று (ஜூலை 13) வழங்கினார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், "திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக 9 முக்கிய பரிந்துரைகள் அளித்துள்ளோம். அவை:

* சென்னையில் அனைத்து பிரதான சாலைகள் மற்றும் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பாட்டிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கு தனியாக ஒரு மூடிய குப்பை தொட்டிகள் அமைக்கலாம். இவ்வகை தொட்டிகளில் மூடியை திறக்காமல் குப்பையை கொட்டுவதற்கு வசதியாக தொட்டிகளின் மூடிகளில் இரண்டு துளைகள் கொண்ட குப்பை தொட்டிகளை அமைக்கலாம்.

* பேப்பர், கண்ணாடி, உலோகங்கள், உணவுக்கழிவுகள் மற்றும் கலப்பு கழிவுகள் போன்றவற்றை பெறுவதற்கு பல்வகை வண்ண குறியீட்டை கொண்ட நவீன பிளாஸ்டிக் காம்பேக்டர் தொட்டிகள் முதல் முறையாக சோதனை முறையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கலாம்.

* குப்பை கையாளும் பணி மற்றும் மக்கும், மக்காத குப்பை பிரித்து கொட்டுவதற்கு விழிப்புணர்வு ஏற்புடுத்துதல், மீறுபவர்கள் மீது அபராதம் விதித்தல் போன்றவறுக்கு பிரத்யேக ஒரு அலுவலர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

* குறுகிய தெருக்களை கொண்ட பகுதிகளில் சிறிய வகை 3.5 கன மீட்டர் கொண்ட காம்பேக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்தலாம்.

* சென்னை மாநகராட்சியில் புதிதாக கொள்முதல் செய்யப்படும் வாகனங்களில் ‘ஆன் போர்டு வையிட்டிங் மிஷின்’ கருவியை பொருத்தி, வெவ்வேறு பயனாளர்களால் உருவாக்கப்படும் திடக்கழிவின் எடையை சோதனை வாயிலாக கண்காணிக்கலாம்.

* கொடுங்கையூரில் குப்பையிலிருந்து 15 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைவில் ஒப்பம் கோரப்பட உள்ளது. இதில், உயர்தொழிற் நுட்பம் மற்றும் உயர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேவையான தொழில் நுட்பத்தை அமல்படுத்தலாம்.

* குப்பையை தரம் பிரித்து பெறுவதற்கு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு சம்மந்தமாக பள்ளி மாணவர்கள் கற்கும் வகையில், ஒரு பாடமாக சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பெரிய குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவுகளை திறமையான முறையில் சேகரிக்க ஒரு அமைப்பை நிறுவலாம்.

இந்த 9 பரிந்துரைகளை அளித்துள்ளோம்” என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x