Published : 13 Jul 2023 05:56 PM
Last Updated : 13 Jul 2023 05:56 PM
மதுரை: கலைஞர் நூலக திறப்பு விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வருவதையொட்டி, 2 ஐஜிக்கள், 9 எஸ்பிக்கள் அடங்கிய சுமார் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மதுரை - புதுநத்தம் ரோட்டில் டிஆர்ஓ காலனி அருகே ரூ.215 கோடியில் கலைஞர் நுற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ.60 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 3.30 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் நிரப்பப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராகி பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி நாளை மறுநாள் (ஜூலை 15) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதன்பின், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதற்கான விழாவில் அவர் பங்கேற்று பேசுகிறார். விழாவுக்கான மேடை, பந்தல் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், கலைஞர் நூலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மதுரை வருகையொட்டி, மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞர் நூலகப் பகுதி, விழா நடக்குமிடம், விமான நிலையத்தில் இருந்து முதல்வர் வரும் வழித்தடப் பகுதி என பாதுகாப்புக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கான போலீஸாரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறித்த ஒத்திகையும் இன்று நடக்கும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: "மதுரை மட்டுமின்றி திண்டுக்கல்,தேனி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 6 எஸ்பிக்கள் வரவழைக்கப்படுகின்றனர். 2 ஐஜிக்கள், 9 எஸ்பிக்கள், 10 கூடுதல் டிஎஸ்பிக்கள், 20-க்கும் மேற்பட்ட டிஎஸ்பி, காவல் உதவி ஆணையர்கள், 50-க்கும் மேலான காவல் ஆய்வாளர்கள் என சுமார் 1500 முதல் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு போலீஸாருக்கு விழா நடக்குமிடம், நூலக பகுதியில் மோப்ப நாய் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
கோவை, தூத்துக்குடி போன்ற வெளியூர்களில் இருந்தும் போலீஸார் அழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள கூடுதல் டிஜிபி அருண் மற்றும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் ஆகியோர் நாளை (ஜூலை 14) மதுரை வரவிருக்கின்றனர். இருப்பினும், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஒருங்கிணைப்பில் மாநகர துணை ஆணையர்கள் அரவிந்த், பிரதீப், மங்களேசுவரன், மதுரை எஸ்பி சிவபிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT