Published : 13 Jul 2023 03:20 PM
Last Updated : 13 Jul 2023 03:20 PM

தாமதங்களும், வீண் அலைக்கழிப்புகளும் தவிர்க்கப்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "மக்களுக்கு சேவைகளை வழங்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் மக்கள் எளிதில் அணுகி சேவைகளை பெறக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும். தாமதங்களும் வீண் அலைக்கழிப்புகளும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்" என்று முதல்வரின் முகவரித் துறையின் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வியாழக்கிழமை (ஜூலை 13) தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முகவரி துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் பெரிய பல திட்டங்களையும் நீண்ட கால தொலைநோக்கோடு செயல்படுத்தி வந்தாலும், மக்களின் அன்றாட தேவைகளை அவர்களது கோரிக்கைகளை நாம் நிறைவேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு துறையின் பொறுப்பாகும்.

பல்வேறு துறை அலுவலர்கள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பெறப்படும் கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து உரிய தீர்வுகளை கண்டு பொதுமக்களுக்கு அதன் விபரத்தை தெரிவிக்காத காரணத்தினால் தான் மக்கள் முதல்வரின் முகவரி துறைக்கு மனுக்களை அனுப்புகிறார்கள். இதன் காரணமாகத்தான் இன்று குறிப்பாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய இரு துறைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த இரு துறைகளிலும் மனுக்கள் அதிக எண்ணிக்கையில் பெறப்படுகிறது, காரணம், மக்களுக்கு அதிக அளவில் இத்துறைகளின் சேவை தேவைப்படுகிறது. ஆனால் அவை அவர்களை முழுமையாக அடையவில்லை என்பதுதான் முக்கிய காரணம்.

அரசின் சேவைகள் சான்றிதழ்கள் போன்றவை கூடுமானவரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வருவாய் துறையை கேட்டுக்கொள்கிறேன். தற்போது ஆன்லைன் முறை இருப்பதாக கூறப்பட்டாலும் நடைமுறையில் பார்க்கும் போது அதில் பல சிக்கல்கள் உள்ளதாக அறிகிறேன். அதனை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.வீட்டு மனைப்பட்டா கோரி வரும் பெரும்பாலான மனுக்களில் இடைநிலை பதில்களே வழங்கப்படுகின்றன.

மனுதாரரை உரிய முறையில் விசாரணை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை உடன் மேற்கொள்ளவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளில் நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் தனிப்பிரிவு மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பட்டா மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் விரைவான விசாரணைக்குட்படுத்தி தீர்வு வழங்குவதை உறுதி செய்யவேண்டும். சான்றிதழ்கள் நிராகரிக்கப்படும் இனங்களில் உயர் அலுவலருக்கு மேல்முறையீடு செய்ய இ-சேவையில் உரிய வசதி ஏற்படுத்த வேண்டும். சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள், சான்றிதழ் தொடர்பான முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

விரைவான தீர்வு மட்டுமல்லாமல் சரியான வகையில் தீர்வு செய்வதை உறுதிபடுத்த துறைத்தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வாரந்தோறும் கட்டாயம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுதாரரிடம் தொடர்பு கொண்டு மனுவின் தீர்வு முறையை அறிந்து மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுக்கு சேவைகளை வழங்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் மக்கள் எளிதில் அணுகி சேவைகளை பெறக்கூடிய ஒரு இடமாக இருக்க வேண்டும். தாமதங்களும் வீண் அலைக்கழிப்புகளும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மக்களும் அவர்கள் அளிக்கும் மனுக்களும் அலுவலகங்களில் மதிக்கப்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டால் தான் அரசு தன் கடமையை, பணியை முறையாக ஆற்றுவதாக கருதப்படும். காவல்துறையைப் பொறுத்தவரையில், பொதுவாக மனுக்களை ஆய்வு செய்ததில் பண மோசடி, குடும்ப பிரச்சினை, வாடகைதாரர் பிரச்சினை மற்றும் நில பிரச்சினை போன்றவையே அதிகம் இடம்பெற்றுள்ளன.

மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (தலைமையிடம்) முதல்வர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த போதிலும் மனுக்கள் விபரங்கள் அமைச்சு பணியாளர்கள், பிரிவு காவலர்களால் கையாளப்படுவதாகவே தெரிகிறது. இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

உள்ளூர் காவல் நிலையங்களில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படாததால் தான் மக்கள் முதல்வரின் தனிப்பிரிவை நாடி வருகின்றனர். பொதுமக்கள் உள்ளூர் காவல் நிலையங்களை அணுகும்போதே முறையாக மனு ரசீது கொடுக்கப்பட்டு விசாரணையில் முகாந்தரம் இருப்பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் முகாந்தரம் இல்லையெனில் அவ்விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டால் அவர்கள் உயர் அதிகாரிகளையும் முதல்வரின் மனுக்கள் பிரிவையும் நாட வேண்டிய அவசியம் இருக்காது.

நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்ற பிரச்சினைகளுக்கு தக்க எழுத்துபூர்வமான அறிவுரையுடன் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்த வேண்டும். பொருளாதார குற்றங்களால் தான் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதை அறிகிறேன். தற்போதுள்ள நடைமுறையில்

  • மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டதை உணர்ந்தபின் கொடுக்கப்படும் மனுக்களின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • இதனை தவிர்க்க கூடுதல் காவல் துறை இயக்குநர் பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் நுண்ணறிவு பிரிவு ஒன்றை தொடங்கி அதன் மூலம் ஒரு நிறுவனம் தொடங்கும் போதே முறையானது தானா என்பதை அறிந்து தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.
  • மேலும், இதுபோன்ற நிறுவனங்களால் ஏமாற்றப்படுவதை தடுக்க மக்களுக்கு தொடர்ந்து தக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

சில காவல் அதிகாரிகள் குறிப்பிட்ட இடைவெளியில் முதல்வர் மனுக்கள் மேளா வைப்பதையும் கீழ்மட்ட விசாரணையில் திருப்தி இல்லாதவர்கள் மனுக்கள் மாவட்ட, நகர காவல் அதிகாரிகளால் நேரடியாக விசாரணை செய்யப்பட்டு தீர்வு காண்பதை அறிகிறேன். இதே நடைமுறையை மற்ற அதிகாரிகளும் பின்பற்றி நடைமுறைபடுத்த வேண்டும்.

அதிக மனுக்களை முடிவு செய்வது அல்ல நம் நோக்கம். நியாயமான தீர்வுகளும் மக்கள் திருப்தியுமே இவ்வரசின் குறிக்கோள். இறுதியாக உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மட்டத்தில் செய்யப்படும் முறையான நியாயமான விசாரணை மட்டுமே மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை உறுதிபடுத்தும் என்பதை மனதில் கொண்டு காவல் துறை உயர் அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு சார்பு நிலை அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

எனவே தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைவர் தங்களது மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களில் முதல்வரின் முகவரி துறை மனுக்கள் முறையாகவும் விரைவாகவும் தீர்வு காணப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.அது மட்டுமல்ல அனைத்து அரசுத் துறை செயலர்களும், துறை தலைவர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தங்கள் துறை மற்றும் மாவட்டங்களில் பெறப்படும் மனுக்களை கவனமாக ஆய்வு செய்து முறையாக தீர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இப்பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட அளவில், வட்ட அளவில் பணியாற்றிய அனைத்து அலுவர்களுக்கும் என் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணியில் சற்று பின் தங்கியுள்ள சில துறைகளும் மாவட்டங்களும் தங்கள் பணியினை முடுக்கி விட்டு மக்கள் தேவையினை விரைந்து பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். அதனை தலைமைச் செயலாளரும், காவல் துறை இயக்குநரும் உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x