Published : 13 Jul 2023 02:06 PM
Last Updated : 13 Jul 2023 02:06 PM

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி தமாகா போராட்டம்

கோவில்பட்டி: தமிழக அரசு வழங்க உள்ள மகளிர் உரிமைத் தொகை எந்தவித பேதமும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் ஜெய கணபதி ஆலயத்தில் உள்ள விநாயகரிடம் மனு அளித்தும் கோயில் முன்பு தேங்காய் உடைத்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடந்தது.

தமிழகத்தில் நடந்த கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வீடுகளில் உழைக்கும் மகளிரை கௌரவிக்கும் வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது செப்.15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தில் தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியின் படி எந்தவித பேதமும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடந்தது.

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜெய கணபதி ஆலயம் முன்பு நகரத் தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் திரண்ட கட்சியினர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு மனு அளித்து பிரார்த்தனை நடத்தி, பூஜைகள் செய்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் அரசின் மகளிர் உரிமைத் தொகை வழங்கி கவுரவிக்க வேண்டும் என வலியுறுத்தி விநாயகர் ஆலயம் முன்பு தேங்காய் உடைத்து கோஷமிட்டனர்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கே.பி.ராஜ கோபால் கூறுகையில், "திமுக-வைப் பொருத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு பேச்சும் என்பதே வழக்கம். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை அடமானம் வைத்தவர்களின் நகைக்கடன் தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு ஏராளமான விதிமுறைகளை
கொண்டு வந்து யாரும் முழுமையாக பயனடைந்து விடாதபடி செய்து விட்டனர்.

அதேபோல் தேர்தலின்போது பெண்களின் வாக்குகளை கவர்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தனர். தற்போது இந்தத் திட்டத்தில் பேதத்தை உருவாக்குவது போல் தகுதியை அறிவித்துள்ளனர். அவர்கள் கூறியது மகளிர் உரிமைத் தொகை. ஆனால் செயல்படுத்துவதோ தகுதி உரிமை தொகை. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்
தலைவிகளுக்கும் பேதம் இன்றி மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜெய கணபதி ஆலயத்தில் உள்ள விநாயகரிடம் மனு அளித்து தேங்காய் உடைத்தோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x