Published : 13 Jul 2023 12:17 PM
Last Updated : 13 Jul 2023 12:17 PM
சென்னை: பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை நடந்தது. பொறியியல் கல்லூரிகளில் சேர 2.29 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 1.88 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணத்துடன் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர்.
இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியானது. தொடர்ந்து, ஜூன் 20-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 102 மாணவர்கள் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1,06,384 மாணவர்கள், 72,558 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என 1,78,959 பேர் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றனர். தகுதியின்மை காரணமாக 3,828 விண்ணப்பங்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு காரணமாக 5,060 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதன்படி, பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 28ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 28ம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் சுற்று கலந்தாய்வும், ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ம் தேதி வரை 2ம் சுற்று கலந்தாய்வும் நடைபெறுகிறது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் 3 சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.
"வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 11,804 பேருக்கு, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; 236 பேர் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளனர். பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை கையாள, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT