Published : 13 Jul 2023 08:30 AM
Last Updated : 13 Jul 2023 08:30 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்று, கொசஸ்தலை ஆறு. பள்ளிப்பட்டு அருகே உருவாகி பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வந்தடைகிறது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரி அருகே உள்ள அணைக்கட்டிலிருந்து உருவாகும், கூவம் மற்றும் கொசஸ்தலை ஆகிய இரு ஆறுகளில், கொசஸ்தலை ஆறு பூண்டி நீர்த்தேக்கத்தில் சேருகிறது. இப்படி இரு கிளைகளாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும் கொசஸ்தலை ஆறு, சென்னை- எண்ணூர், வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வரும் மழை நீராலும் ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீராலும் நிரம்பும் பூண்டி நீர்த்தேக்கத்தின் உபரி நீரும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து வீணாக கடலில் கலப்பது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது, கொசஸ்தலை ஆற்றிலிருந்து சுமார் 20 டிஎம்சி உபரி நீர் கடலில் கலந்தது.
அதேபோல், கடந்த 2020-ம் ஆண்டு முதல், 2022-ம் ஆண்டு வரை சுமார் 30 டிஎம்சி உபரிநீர், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து கடலில் கரைந்தது. இப்படி வீணாகும் வெள்ள நீரை சேமித்து வைக்க ஏதுவாக திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றில் 4 இடங்களில் நீர்த்தேக்கங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதை அறிய நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையின்போது, ஆந்திர மாநிலம் மற்றும் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள லவ, குச மற்றும் நந்தியாறு, கல்லாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கேசாவரம் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. அவ்வாறு பெருக்கெடுத்தும் ஓடும் நீரால் பூண்டி நீர்த்தேக்கமும் நிரம்பி உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் வெளியேறி கடலுக்குச் செல்கிறது.
அதனை தவிர்க்கும் வகையில், வெள்ள நீரைசேமித்து வைக்க ஏதுவாக திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றில் 4 இடங்களில் நீர்த் தேக்கங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளைஆய்வு செய்ய ரூ.5.6 கோடியை ஒதுக்கீடு செய்து, சமீபத்தில் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் முதன்மையானதாக விளங்கும் பூண்டி நீர்த் தேக்கத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் 4 இடங்களில் நீர்த்தேங்களை அமைப்பதற்கான ஆய்வுப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி கேசாவரம் அணைக்கட்டுக்கும், மணவூர் ரயில்வே பாதைக்கும் இடையே, மணவூர் ரயில்வே பாதைக்கும், பட்டரைபெரும்புதூர் தடுப்பணைக்கும் இடையே, பூண்டி நீர்த்தேக்கத்துக்கும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும் இடையே மற்றும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டுக்கும், இருளிப்பட்டு தடுப்பணைக்கும் இடையே என 4 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வுப் பணியை சுமார் 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வுப் பணியின் முடிவில் நீர்த்தேக்கங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பது உறுதியானால், ஆற்றின் கரைகள் உயர்த்தப்பட்டு நீர்த்தேக்கங்கள் அமைக்க, திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, அரசின் அனுமதி பெற்று, நீர்த்தேக்கங்கள் அமைக்கும் பணி தொடங்கும்.
சுமார் 2 டிஎம்சி நீரை தேக்கி வைக்கக் கூடிய இந்த நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டால், வெள்ள நீர் வீணாவது தடுக்கப்படுவதோடு, நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சென்னைக்கு கூடுதல் குடிநீர் கிடைப்பதுடன் தேவையையும், கணிசமாக பூர்த்தி செய்யலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT