Published : 13 Jul 2023 08:25 AM
Last Updated : 13 Jul 2023 08:25 AM

கே.கே.நகர் சிவன் பூங்காவில் உடற் பயிற்சி சாதனங்கள் கூடுதலாக தேவை

சிவன் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள். படம்: செ.ஆனந்த விநாயகம்

சென்னை: சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை அதிகரிக்க வேண்டும் என உங்கள் குரல் சேவை வழியாக வாசகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையைப் பொருத்தவரை கடற்கரைக்கு அடுத்தபடியாக மக்கள் பொழுது போக்குவதற்கான இடங்களில் பூங்காக்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இங்குள்ள 786 பூங்காக்களில் ஒப்பந்த முறையில் 584 பூங்காக்களும், மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக 145 பூங்காக்களும், பொதுமக்கள் தத்தெடுப்பு முறையில் 57 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதில் கே.கே.நகர் பி.வி.ராஜமன்னார் சாலையில் உள்ள சிவன் பூங்கா 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் சினிமா படப்படிப்பு தளமாக பயன்பட்ட சிறிய பூங்கா, பின்னர் மாநகராட்சியால் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது அங்கு சிறார்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், மூலிகை தோட்டம், நடைமேடை என பூங்காவுக்கான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இத்துடன் அங்கு சிவன் கோயிலும் அமைந்திருப்பதால் காலை, மாலை என இருவேளை பூஜை நடப்பதோடு, சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடப்பது வழக்கம்.

எனவே, பூங்கா மட்டுமின்றி ஒரு கோயில் என்ற வகையிலும் பக்தர்களும் வந்து செல்கின்றனர். இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பொழுதுபோக்குவதற்கான ஏற்ற இடமாக சிவன் பூங்கா இருக்கிறது. குறிப்பாக ஆண், பெண் என தனித்தனியே உடற்பயிற்சி செய்வதற்கு இடமும் உபகரணங்களும் உள்ளன. ஆனால் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த பூங்காவின் உடற்பயிற்சி சாதனங்களை அதிகரிக்க வேண்டும் என வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழின் 'உங்கள் குரல்' என்ற பிரத்தியேக புகார் எண் சேவையைத் தொடர்பு கொண்டு அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த சிராஜுதீன் கூறியதாவது: சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் அசோக் நகர், வடபழனி, கே.கே.நகர் முதல் நெசப்பாக்கம் வரை உள்ள மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இங்குள்ள உடற்பயிற்சி சாதனங்கள் போதுமானதாக இல்லை. எனவே, சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

மேலும், பெடல் செய்வதற்கான உபகரணம் பழுது நீக்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. மீண்டும் அதனை பயன்பாட்டுக்கு வைக்கவில்லை. அவ்வப்போது உபகரணங்களின் தரத்தை ஆய்வு செய்து, பழுதாகாத வகையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக அந்தப் பகுதியின் மாமன்ற உறுப்பினர் நிலவரசி துரைராஜிடம் கேட்டபோது, "தற்போது பூங்கா பராமரிப்புக்கான பராமரிப்பு டெண்டர் முடிவடையும் நிலையில் உள்ளது. உடற்பயிற்சி சாதனங்கள் குறித்து மாநகராட்சி செயற்பொறியாளரிடம் பேசி வருகிறோம். இது தொடர்பாக ஓரிரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x