Published : 13 Jul 2023 03:44 AM
Last Updated : 13 Jul 2023 03:44 AM
சென்னை: பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று மத்திய சட்ட ஆணையத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அனுப்பி உள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகளிடம் 22-வது சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது.
இந்நிலையில், சட்ட ஆணையத்துக்கு திமுக சார்பில் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் எழுதியுள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக, மக்களவையில் 3-வது இடத்தில் உள்ளது. இது, சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கி வரும் கட்சி. பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்கு, சம்பிரதாயம், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், பிறப்பின் அடிப்படையிலான வேற்றுமைகள் ஆகியவற்றுக்கு எதிராக வலிமையாக குரல் எழுப்பி வந்துள்ளது. சாதி கடந்து அனைவரும் சமமாக வாழ, திமுக ஆட்சியில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன.
அதே நேரம், இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படையில் அவரவர் பழக்க வழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை திமுக ஆதரித்து வந்துள்ளது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும். சட்டம் - ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகள் உருவாகும்.
எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசு உரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்பு சட்டம் வழங்கிய தனிநபர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகளை பறிப்பதற்கான முயற்சி என்பதால், பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது. இதை அமல்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையது அல்ல.
தவிர, பெரும்பான்மை இந்து மதத்தை சேர்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்த சட்டம் அழித்துவிடும்.
அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசும்போது, ‘‘பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள், இதை பின்பற்றலாம்’’ என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், ஏற்காதவர்கள் மீதும் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்கிறது. அடிப்படை உரிமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்த சட்டத்தையும் திமுக ஏற்காது.
கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது 1989-ல் பெண்களுக்கு சொத்துரிமை சட்ட திருத்தத்தை நிறைவேற்றினார். அதுபோல, பலதார மணத்தை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்றலாம்.
மதங்களுக்கு இடையேயான பொது சிவில் சட்டத்தை கொண்டுவரும் முன்பு, இந்து மத சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசு சமன் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையை பாதிக்கும் எந்த சட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்ற கூடாது. இந்த பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசமைப்பின் சட்டப் பிரிவுகளை மீறுவதாக திமுக பார்க்கிறது.
தமிழக மக்கள்தொகையில் இந்துக்கள் 87%, இஸ்லாமியர்கள் 6%, கிறிஸ்தவர்கள் 7% உள்ளனர். அனைவரும் மதங்களை கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய ஒற்றுமைக்கு பொது சிவில் சட்டம் ஊறுவிளைவிக்கும். எனவே, இதற்கு அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT