Published : 23 Jul 2014 10:00 AM
Last Updated : 23 Jul 2014 10:00 AM

மீண்டும் கவனம் பெறும் தொன்மையின் எச்சங்கள்: அழிவிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் மீள வாய்ப்பு

கடல் கடந்து தமிழரின் வீரத்தை பறைசாற்றிய மாமன்னர் ராஜேந்திர சோழன் அரியணையேறிய 1000-வது ஆண்டு விழாவும் அவரது ஆடி திருவாதிரை பிறந்த நாள் விழாவும் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளதையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் எழுத்தாளர் பாலகுமாரன், தமிழக வேளாண் துறை ஆணையர் ம.ராசேந்திரன், தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சாந்தஷீலா நாயர், தஞ்சை ஆட்சியர் என்.சுப்பையன், ஒழுங்குமுறை நடவடிக்கை விசாரணை ஆணையர் ப.செந்தில்குமார், தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் ஜி.மகேஸ்வரி, சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பொற்கோ, கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

“இதுவரையிலான மார்கழி திருவாதிரைக்கு பதிலாக ஆடிதிருவாதிரை அன்று ராஜேந்திரன் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. எங்களுக்கு கிடைத்த கல்வெட்டுகள் உள்ளிட்ட புதிய தரவுகளின் அடிப்படையில் அறிஞர்களிடம் கலந்தாலோசித்தே இந்த கொண்டாட்டம் நடைபெற உள்ளது. மண்ணின் மைந்தர்கள் ஒன்று திரண்டு நமது ஆண்ட தலைமுறையின் பெருமையைப் பறைசாற்றுவதோடு அல்லாமல், அவற்றை அறிந்திராத அடுத்த தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த விழா நடைபெற உள்ளது.

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் அந்தஸ்து பெற்றுள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த விழாவினால் மாளிகைமேடு உள்ளிட்ட அருகிலுள்ள தொன்மையின் எச்சங்கள் மீண்டும் கவனம்பெற்று, அழிவிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் அவை மீளவும் வழியுண்டு” என்றார் விழா ஒருங்கிணைப்பாளரான இரா.கோமகன்.

“அலைகடல் நடுவே கலம் பல செலுத்தி…” என்ற மெய்கீர்த்தி வரிகளுக்கு சொந்தக்காரரான ராஜேந்திர சோழனே வலிமையான கப்பல்படையை வைத்திருந்த முதல் இந்திய அரசன். அவரது கடலாதிக்கத்தால் தென்னிந்தியா, வடநாட்டு பகுதிகள் மட்டுமல்ல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் 250 ஆண்டு காலம் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகராக விளங்கியது.

கங்கை கொண்ட சோழபுரம் நகரையும் கோயிலையும் நிர்மாணித்தது, வட நாட்டு வெற்றிகள் வாயிலாக புனித நதிகளின் நீரை கொண்டுவந்து தற்போது பொன்னேரி என்றழைக்கப்படும் சோழகங்கத்தை உருவாக்கியது, இதன் பின்னணியில் இப்பகுதியை ராஜேந்திரன் தேர்வு செய்ததற்கு காரணங்கள் உண்டு.

அவற்றில் பிரதானமானது, தஞ்சையில் கோயில் கட்டினால் தந்தையின் ஆகிருதி முன்பாக அவை எடுபடாது போக வாய்ப்புண்டு. இவற்றை விட சுமார் 9 லட்சம் வீரர்களை உள்ளடக்கிய மிகப்பெரும் நிலைப்படையை நிறுத்துவதற்கு தஞ்சையைத் தாண்டி ஆற்றங்கரையோரம் மிகப்பெரிய நிலப்பரப்பு தேவைப்பட்டது.

தற்போதைய விழா வாயிலான நினைவு கூர்வதன் மூலம், வறட்சியும் பின்தங்கிய வாழ்வாதாரத்தைக் கொண்டும் உள்ள இன்றைய உடையார்பாளையம் வட்டார மக்களுக்கு அரசின் புதிய பார்வை, வசதிகள், திட்டங்கள் கிடைக்க வாய்ப்புண்டு” என்று ராஜேந்திர சோழனின் பெருமையையும் தஞ்சையைத் தாண்டி கங்கைகொண்ட சோழபுரம் அவரால் சிறப்பு பெற்றதையும் வருணிக்கிறார் அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வரும் இப்பகுதியின் வரலாற்று ஆய்வாளருமான தியாகராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x