Published : 13 Jul 2023 05:27 AM
Last Updated : 13 Jul 2023 05:27 AM

தீபாவளி பண்டிகை முன்பதிவு | முக்கிய ரயில்களில் டிக்கெட் தீர்ந்தது: நவ.10-ம் தேதிக்கு இன்று முன்பதிவு

சென்னை: நடப்பாண்டில் தீபாவளி நவ. 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே, நவ. 9, 10 (வியாழன், வெள்ளி) ஆகிய நாட்களில் சொந்த ஊருக்குச் செல்ல பலரும் திட்டமிட்டு இருப்பார்கள்.

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நவ. 9-ம் தேதி (வியாழன்) பயணிக்க விரும்புவோர் நேற்று ஆர்வமாக முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென்மாவட்ட விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் நிரம்பிவிட்டன. தொடர்ந்து, ஏ.சி. பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு டிக்கெட் முன்பதிவு மையங்களில் பொதுமக்கள் நேற்று காலை முதல் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்தனர். பெரும்பாலானோர் இணையதளம், செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருவதால், முன்பதிவு மையங்களில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.

சென்னை எழும்பூரில் இருந்து நவ. 9-ம் தேதி புறப்படும் பாண்டியன், முத்துநகர், பொதிகை, கன்னியாகுமரி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய விரைவு ரயில்களிலும், சென்ட்ரலில் இருந்து கோவைக்குப் புறப்படும் சேரன், திருவனந்தபுரம் விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி களில் முன்பதிவு முடிந்து, காத்திருப்பு பட்டியல் காட்டியது.

சென்னை-மதுரைக்கு செல்லும் பாண்டியன் விரைவு ரயிலில் அதிகபட்சமாக காத்திருப்பு பட்டியல் 370-ஆகவும், சென்னை-செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் காத்திருப்போர் பட்டியல் 360-ஆகவும் இருந்தது. பெரும்பாலான 3-ம் வகுப்பு ‘ஏசி’ பெட்டிகளும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ‘ஏசி’ பெட்டிகளில் கணிசமான டிக்கெட்டுகள் இருந்தன.

நவ.10-ம் தேதி வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு இன்றும் (ஜூலை 13), நவ. 11-ம்தேதி சனிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு நாளையும் (ஜூலை 14) நடைபெற உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென்மாவட்ட விரைவு ரயில்களின் தூங்கும் வசதியுள்ள பெட்டிகளில் டிக்கெட் விற்று தீர்ந்தன. அதிக காத்திருப்பு பட்டியல் உள்ள வழித்தடங்களை தேர்வு செய்து, சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x