Published : 13 Jul 2023 05:42 AM
Last Updated : 13 Jul 2023 05:42 AM
கிருஷ்ணகிரி: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய கார் கிருஷ்ணகிரியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரை, வரும் 15-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் மீண்டும் மக்கள் பார்வைக்கு நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக 3 முறை பதவி வகித்தவர் காமராஜர். இவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, டிவிஎஸ் குழும தொழிலதிபர் டி.வி.சுந்தரம், 1952-ல் அறிமுகமான ‘செவ்ரோலெட் ஸ்டைல்லைன் டீலக்ஸ்’ கருப்பு நிற காரை (எம்டிடி 2727) வழங்கினார்.
இக்காரை முதல்வரான பின்னரும் காமராஜர் பயன்படுத்தி வந்தார். காமராஜர் மறைவுக்குப் பின்னர் சென்னை காமராஜர் அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இந்த கார் வைக்கப்பட்டது.
பொலிவிழந்த இக்காரை புதுப்பிக்க காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர். இதையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல கார் பழுது நீக்கும் நிறுவனத்தின் மூலம் கார் புதுப்பிக்கப்பட்டது. இத்தகவலை அறிந்த பொதுமக்கள் காரின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கார் பழுது நீக்கும் நிறுவன உரிமையாளர் அஸ்வின் ராஜ்வர்மா கூறியதாவது: என் தாத்தா பி.கே.பி.எம். முனுசாமி, காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரியில் எம்எல்ஏ-வாக இருந்தார். நாங்கள் பாரம்பரியமாகக் காங்கிரஸ் குடும்பத்தினர் என்கிற அடிப்படையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி என்னிடம், காரை புதுப்பித்துத் தருமாறு கேட்டார்.
அதன்படி கடந்த ஜூன் 1-ம் தேதி காரை சென்னை காமராஜர் அரங்கத்திலிருந்து எடுத்து வந்து புதுப்பித்துள்ளோம். கார் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதால் அதன் உதிரிப் பாகங்களான கார் கண்ணாடி, ரப்பர் ஆகியவற்றை அமெரிக்காவிலிருந்து வாங்கினோம்.
காரின் சில்வர் பாகங்கள் ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்களைப் புனரமைக்கும் நிபுணர் அர்ஜூன் தலைமையிலான குழுவினர் மூலம் புதுப்பித்தோம்.
புதுப்பொலிவு பெற்றுள்ள காரை தற்போது பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் வந்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். வரும் 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் மீண்டும் மக்கள் பார்வைக்கு இந்த நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT