Published : 13 Jul 2023 12:57 AM
Last Updated : 13 Jul 2023 12:57 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 80 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன்படி, கடந்த ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டது.
நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி 79.59 அடியாக இருந்த நீர்மட்டம், பின்னர் பருவமழை காரணமாக அதிகரித்தது. தொடர்ந்து, 80 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்து வந்தது. பின்னர், நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.29 அடியில் இருந்து 79.40 அடியாக சரிந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது.
நீர் இருப்பு 42.24 டிஎம்சியில் இருந்து 41.36 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 198 கனஅடியிலிருந்து 161 கனஅடியாகவும் குறைந்தது. பாசனத்துக்கு அணையின் மின் நிலையம் வழியாக விநாடிக்கு 2,000 கனஅடியும், சுரங்க மின் நிலையம் வழியாக 8,000 கனஅடியும் என 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேரளா, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்தது. அதேபோன்று, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, நீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT