Published : 12 Jul 2023 08:06 PM
Last Updated : 12 Jul 2023 08:06 PM
சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலிருந்து பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.
நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் அமைச்சர் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான மேல் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிருவாக மண்டல இயக்குநர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள் ஆகியோருடனான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையரக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "முதல்வர், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களின்போது பொதுமக்களிடமிருந்து குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, சாலை மேம்பாடு, மின் வசதிகள், நீர்நிலைகளை மேம்படுத்துதல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு மேல்நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களும் மேல்நடவடிக்கைகளுக்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பெறப்பட்ட மனுக்களின் மீது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், புதிய பணிகளுக்கான திட்ட முன்மொழிவுகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியக்கூடிய அனைத்து நிலை அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்களின் மீதான நடவடிக்கைகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொண்டு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும்.
மேலும், பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்களில் புதிய திட்டங்களுக்கான கோரிக்கைகள் வரும் பட்சத்தில் உடனடியான திட்ட அறிக்கைகளை தயார் செய்து முன்மொழிவுகளை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். உரிய பரிசீலனைகள் மேற்கொண்ட பின்னர் அதற்கான அனுமதிகள் உரிய கால கட்டத்திற்குள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் தினந்தோறும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, குடிநீர் வழங்கல், சாலை மேம்பாடு, பூங்காக்கள் பராமரிப்பு, மின் வசதிகள், மழைநீர் வடிகால் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வரவேண்டும். பருவமழைக்கு முன்னதாக மழைநீர் வடிகால்கள் மற்றும் பாதாள சாக்கடைகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலிருந்து பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும். கோரிக்கையின் விவரங்கள், கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நாள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நாள் மற்றும் மனுக்கள் மீதான நிலை குறித்த விவரங்கள் முற்றிலுமாக ஆய்வு செய்யப்படும். எனவே, அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து பெறக்கூடிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT