Published : 12 Jul 2023 08:04 PM
Last Updated : 12 Jul 2023 08:04 PM
சென்னை: சென்னையில் 379 கி.மீ நீளத்துக்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகள், கட்டடப் பணிகள், பூங்கா பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆணையர் ராதாகிருஷ்ணன், தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று (12.07.2023) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் ரூ.1481 கோடி மதிப்பீட்டில் 379.66 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் பருவமழைக்கு முன்னதாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 64.70 கி.மீ. நீளத்திற்கு 384 சாலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலைப் பணிகள் மேற்கொள்ளும் போது, பழைய சாலைகளை முழுவதும் அகழ்ந்தெடுத்து, புதிய சாலைகளை அமைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் அனைத்து சாலைகளையும் தரமானதாக அமைத்திடவும், மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் உடனுக்குடன் சாலைப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
மேலும், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகள் மற்றும் புதிய பூங்காக்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள பூங்காக்களில் மரங்கள் மற்றும் செடிகள் நடுதல், நடைபாதை அமைத்தல் போன்ற மேம்பாட்டு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT