Published : 12 Jul 2023 06:56 PM
Last Updated : 12 Jul 2023 06:56 PM
மதுரை: இலங்கை கடற்படையினரால் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு இருந்தது. 1974-ல் இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். 2013-ல் 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கவும், 1974ம் ஆண்டின் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கச்சத்தீவு மீட்பது குறித்து இந்த நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது. மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இந்த மனு எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில், ''இந்திய மீனவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2014-க்கு பின் தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல'' எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், ''மத்திய அரசு தரப்பில் இந்திய மீனவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் படகு மற்றும் வலைகள் விலை மதிப்பு அற்றவை. அவைகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகிறது'' என்றனர்.
பின்னர், ''இதே தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது'' என்று கூறி விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...