Published : 12 Jul 2023 06:23 PM
Last Updated : 12 Jul 2023 06:23 PM
மதுரை: மதுரையில் ஜூலை 15-ல் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் எம்.பி., எம்எல்ஏ. பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
மதுரையின் மற்றொரு அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் தயாராகி வருகிறது. இது மதுரையில் புதுநத்தம் சாலையில் அதிநவீன அம்சங்களுடன் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.215 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது தென்மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கலைஞர் நூலகம் கட்டுமானப்பணி 11.01.2022-ல் தொடங்கி கடந்த ஜூன் மாதம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூலை 15-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்தாளர், சாகித்ய அகாடமி விருதாளர், மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கட்சி) பெயர் அழைப்பிதழில் இல்லை.
அதேபோல் நூலகம் அமைந்துள்ள மதுரை வடக்குத் தொகுதி திமுக எம்எல்ஏவுமான கோ.தளபதி பெயரும் இடம்பெறவில்லை. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் இதுதான் 'திராவிட மாடலா?' என சர்ச்சை கருத்துகள் வைரலாகி வருகின்றன.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவுக்கு விடுத்துள்ள அழைப்பிதழில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்புரை ஆற்ற, அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து விழாப்பேருரை ஆற்றுகிறார். சிறப்பு விருந்தினராக எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்சிஎல் குழுமத் தலைவர் ரோஷினி நாடார் பங்கேற்கின்றனர். பொதுப் பணித்துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன் நன்றியுரை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதி ஆகியோர் பெயர் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளைத்தான் தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறது. ஆனால், அந்த அழைப்பிதழில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பெயரும் குறிப்பிடாதது ஏனோ? இதுதான் 'திராவிட மாடல்' அரசு என தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது வைரலாகி வருகிறது.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், எல்லாரும் சமம் என்பதே திராவிட மாடல் எனச் சொல்லும் திமுக அரசு, நூலகம் திறப்பு விழா அழைப்பிதழில் எம்.பியின் பெயரையும், தொகுதி எம்எல்ஏவின் பெயரையும் குறிப்பிடாதது ஏன்? மேலும், கல்வி வளர்ச்சி நாளன்று திறக்கப்படும் என குறிப்பிட்டவர்கள் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாள் என குறிப்பிடாதது ஏன்? - இப்படி கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதான் 'திராவிட மாடலா' எனவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...