Published : 12 Jul 2023 04:27 PM
Last Updated : 12 Jul 2023 04:27 PM
சென்னை: டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கியதை தட்டிக் கேட்டவரை தாக்கிய காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கியதை தட்டி கேட்ட ஒருவரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு நகரம் வேதாச்சலம் நகரில் உள்ள மதுக்கடையில் மதுப்புட்டிகளுக்கு அதிகபட்ச விலையை விட ரூ.10 அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய ஒருவரை செங்கல்பட்டு நகர காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா என்பவர் கண்மூடித்தனமாக தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக ஒருவரை காவல்துறையினர் தாக்குவது கண்டிக்கத்தக்கது. இது மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் செயல் ஆகும்.
தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். மதுவுக்கு அடிமையான அனைவரும் அப்பழக்கத்திலிருந்து மீட்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதே நேரத்தில் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதையும், அதை எதிர்த்து வினா எழுப்புபவர்கள் காவல் துறையினரால் தாக்கப்படுவதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மதுக்கடைகளை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்ட போது, மது குடிக்க வரும் குடிமகன்களுக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறை, இப்போது கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக தாக்குவதை அனுமதிக்க முடியாது. அதற்கு காரணமான காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய செயல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி மதுக்கடைகளை மூடுவது தான். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அடுத்த இரு ஆண்டுகளில் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, "சமூக அக்கறை கொண்ட ஒருவர் மதுவிலக்குத் துறைக்கு பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது போன்ற தோற்றம் இருந்தது. ஆனால், அமைச்சர் முத்துசாமி இன்றைக்கு பேசுவதைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார். அதன் விவரம்: டாஸ்மாக் சர்ச்சை | “அமைச்சர் முத்துசாமி பேசுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” - அன்புமணி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT