Published : 12 Jul 2023 02:47 PM
Last Updated : 12 Jul 2023 02:47 PM

“கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம்” - முதல்வர் ஸ்டாலின்

சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ. 44.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: "மாணவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல், கல்வி மட்டுமே நம்மைக் காக்கும் சொத்து. கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம். கல்வியைத் தேடிச் சென்னை வரும் நமது மாணவர்கள் தங்கியிருக்க 'திராவிடர் இல்லம்' நிறுவினார் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடேசன்.

கல்வி மூலமாகவே ஒடுக்கப்பட்டோர் வளர்ச்சி காண முடியும் என உரிமை முழக்கம் செய்து, இரவுப் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கினார் எம்.சி.ராஜா. அவரது பெயரில் பட்டியலின மாணவர்கள் தங்கிப் பயில, 1961-ல் விடுதி அமைத்தார் பெருந்தலைவர் காமராஜர்.

அந்த விடுதியை நவீன வசதிகளுடன் புதுப்பித்துக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, மாணவர்களுடன் உரையாடினேன். மாணவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல், கல்வி மட்டுமே நம்மைக் காக்கும் சொத்து. கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் ரூ. 44.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x