Published : 12 Jul 2023 03:38 PM
Last Updated : 12 Jul 2023 03:38 PM
கோவை: கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், கோவை மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர், சாடிவயலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விநியோகம் செய்யப்படுகிறது.
சிறுவாணி அணையில் 49.50 அடி வரை தண்ணீரை தேக்க முடியும். ஆனால், அணையின் பாதுகாப்பு கருதி 45 அடி உயரம் வரை மட்டுமே கேரள அரசால் தண்ணீர் தேக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்பு வரை சிறுவாணி அணையில் இருந்து தினமும் சராசரியாக 100 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) அளவுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த இரு மாதங்களாக போதியளவுக்கு நீர் இல்லாததால் அணையில் இருந்து 30 முதல் 35 எம்.எல்.டி அளவுக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த மே, ஜூன் மாதங்களில் அணையின் நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 0.7 அடி என்ற நிலையில் நீர்மட்டம் இருந்தது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையால், சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் நடப்பாண்டு கோவைக்கு சிறுவாணி அணை தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகத்துக்கு கை கொடுக்கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து சிறுவாணி அணைப்பிரிவு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அணைப்பகுதியில், நடப்பாண்டு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியது. நீர்மட்டத்துக்கேற்ப அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அணையில் கடந்த 5-ம் தேதி 30 மி.மீ, 6-ம் தேதி 120 மி.மீ, 7-ம் தேதி 112 மி.மீ, 8-ம் தேதி 62 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. ஆனால், கடந்த 10-ம் தேதி 4 மி.மீ, நேற்றைய நிலவரப்படி 5 மி.மீ அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது. கடந்த 5-ம் தேதி 0.79 என்ற அளவில் நீர்மட்டம் இருந்தது. ஆனால், அடுத்த இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்ததால் நீர்மட்டம் தடாலடியாக உயர்ந்தது.
7-ம் தேதி 8.33 அடியாகவும், 8-ம் தேதி 10.27 அடியாகவும், 10-ம் தேதி 11.61 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. நேற்று 11.74 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. நேற்று அணையில் இருந்து 70.17 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டது. கடந்த இருநாட்களாக எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லையென்றாலும், பருவமழைக் காலம் இன்னும் உள்ளது.
எனவே, வரும் வாரத்தில் சிறுவாணி அணைப்பகுதியில் மழை அதிகம் பெய்யும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு மாதத்துக்கு தேவையான குடிநீரை தட்டுப்பாடின்றி விநியோகிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT