Published : 12 Jul 2023 02:31 PM
Last Updated : 12 Jul 2023 02:31 PM

வட மாநில பேரிடர் | பயணத் தடையால் தவிக்கும் தமிழர்களுக்கு உதவும் பணியில் தமிழக அரசு தீவிரம்

இமாச்சல் வெள்ளம்

சென்னை: “வட மாநிலத்தில் கனமழை, வெள்ளத்தால் நிகழ்ந்து வரும் பேரிடரில் பயணத் தடையிலுள்ள தமிழர்களுக்கு உதவும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற 12 கல்லூரி மாணவர்கள், அங்கு பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழகத்துக்கு திரும்ப முடியவில்லை என்ற தகவல் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் 10.07.2023 அன்று கிடைக்கப்பெற்றது. முதல்வர் அறிவுரையின்படி உடனடியாக இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறை, இயக்குநர், குலு மற்றும் மண்டி ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்புகொள்ளப்பட்டு மாணவர்களின் நிலைமை குறித்து கேட்டறியப்பட்டது.

இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறையினர், மிக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது என்றும், சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்றும், தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் நிலைமை சரியானவுடன் உடனடியாக தங்கள் ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர். இதனிடையே இமாச்சலப் பிரதேச தலைமை காவல்துறை இயக்குநர் மூலமாக அனைத்து சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது.

11.07.2023 அன்று மாலை 6 மணியளவில் போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ளதாகவும், குலு மற்றும் மண்டி மாவட்டங்களில் இருந்து 4500 வாகனங்கள் சண்டிகருக்கு புறப்பட்டதாகவும் நிலைமை சீரடைந்து உள்ளதாக செய்தி கிடைக்கப்பெற்றது. மேற்கண்ட 12 கல்லூரி மாணவர்களும் நலமுடன் சண்டிகருக்கு வந்துள்ளதாகவும் அவர்களின் பெற்றோர் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது.

12.07.2023 அன்று காலை தொலைக்காட்சி செய்தி மூலமாக, அமர்நாத் பனிலிங்கம் தரிசிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்டதால் தமிழகத்துக்குத் திரும்பி வருவதற்கான பயணம் தடைபட்டுள்ளதாக அறியப்பட்டது. இது தொடர்பாக டெல்லி தேசிய பேரிடர் மீட்பு படையின் காவல் துறை துணைத் தலைவரை தொடர்புகொண்டு விசாரிக்கப்பட்டது.

கடந்த இரு தினங்களாக ஜம்முவிலிருந்து பஹல்காம் மற்றும் பல்டால் மார்க்கமாக அமர்நாத்திற்கு செல்லும் வழிப்பாதை மூடப்பட்டு இருந்ததாகவும் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், வட மாநிலத்தில் நிகழ்ந்து வரும் பேரிடரில் சிக்கியுள்ள தங்களது உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இதுவரை 12 தொலைப்பேசி அழைப்புகள் பெறப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதலோடு வடமாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களுடன் தொடர்புகொண்டு பயணத் தடையிலுள்ள தமிழர்களுக்கு உதவும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது" என்று அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x