Published : 12 Jul 2023 04:04 AM
Last Updated : 12 Jul 2023 04:04 AM
சென்னை: மக்கள் தொகை 8.04 கோடியாக அதிகரித்துள்ளதால் கட்டுப்படுத்த 4 ஆயிரம் பேருந்துகளில் கருத்தடை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, தமிழக சுகாதாரத்துறை சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்று ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பல்வேறு அறிவுறுத்தல்களுடன் கூடிய 14 வகையாக அச்சிடப்பட்ட வாசகங்களை 4 ஆயிரம் பேருந்துகளில் பொருத்தும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி: தொடர்ந்து ஆண்கள், பெண்களுக்கு நிரந்தர மற்றும் தற்காலிக கருத்தடை, நவீன மாத்திரைகளை உட்கொள்ளுதல் போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, செவிலியர் பயிற்சி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில், வெற்றி பெற்ற செவிலியர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், குடும்ப நலத்துறை இயக்குநர் வி.பி.ஹரிசுந்தரி, துணை இயக்குநர் (தகவல், கல்வி தொடர்பு) எம்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சி முடிவில், அமைச்சர்மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1987-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, தமிழக சுகாதாரத்துறை சார்பில் 37-வது உலக மக்கள் தொகை தினம் இன்று (ஜூலை 11) அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியையும், தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடியே 4 லட்சத்தையும் தாண்டியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார் 30 கோடி முகமுடையாள் என்ற பாடலில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடிக்கு இருந்தது என்று சுட்டிக்காட்டியிருப்பார். தற்போது ஒவ்வொரு ஆண்டும் 1 கோடிக்கும் மேலாக மக்கள் தொகை உயர்ந்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.
மக்கள் தொகை அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதாரம் என்பதுகேள்விக்குறியாகிறது. இதனைகருத்தில் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழகம் முழுவதும் 4ஆயிரம் பேருந்துகளில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன. விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்படுகிறது.
பெண்கள் சிறுவயதில் திருமணம் செய்து கொள்வதற்கு தீர்வு காணும் வகையில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் முதன்முறையாக கருவின் வளர்ச்சித்தன்மை குறித்து அறிந்துகொள்ள, புதிய ஆய்வகத்தை சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் திறந்து வைத்தார். இதன் மூலம், கருவில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை கண்டறிந்து கருவினை வளர்ப்பது தொடர்பாக பெற்றோர் முடிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT