Published : 12 Jul 2023 04:01 AM
Last Updated : 12 Jul 2023 04:01 AM

சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட 1,772 பணிகளுக்கு ரூ.6,034 கோடி ஒதுக்கீடு - நெடுஞ்சாலைத்துறை அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம், பராமரிப்பு, பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட 1,772 பணிகளுக்கு ரூ.6,034 கோடி நிதி ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின்போது பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடப்பாண்டு 13.30 கி.மீ. ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை உள்ளிட்ட 200 கி.மீ. சாலைகள், 4 வழித்தடமாகவும், 600 கி.மீ. சாலைகள் இருவழித்தடமாகவும் அகலப்படுத்தப்படும்.

நெடுஞ்சாலைகளில் விபத்து தடுப்புக்காக ரூ.150 கோடியில் சாலை பாதுகாப்பு பணி, மலைப்பகுதி கொண்டை ஊசிவளைவுகள், ஆபத்தான வளைவுகளில் உருளை விபத்து தடுப்பான்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்படும். 273 தரைப்பாலங்கள் ரூ.787 கோடியில் கட்டப்படும். சென்னையில் நிரந்தர வெள்ளத்தடுப்புக்கு ரூ.116 கோடியில் சிறுபாலங்கள், கால்வாய்கள் கட்டப்படும்.

மாநில நெடுஞ்சாலைகளில் நில எல்லை அளவு மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் விவரங்கள் கணினி மயமாக்கப்படும். 9 மாவட்டங்களில் 12 ஆற்றுப்பாலங்கள் ரூ.215.80 கோடியில் கட்டப்படும்.

துறையூர், திருப்பத்தூர், நாமக்கல் நகரங்களுககு ரூ.286 கோடியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.1,093கோடி மதிப்பில் பணிகள் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்டவற்றை அறிவித்திருந்தார்.

இத்திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்ட திட்டத்தின்கீழ் மொத்தம் 1,772 பணிகளுக்கு ரூ.6,033.93 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டு, நிதி ஒதுக்கும்படி அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை கோரிக்கை விடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, ஒவ்வொரு பணிக்கு ஆகும் செலவுகளை கணக்கிட்டு, ரூ.6,033.93 கோடி ஒதுக்குவதற்கான நிர்வாக ஆணையை பிறப்பித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x