Published : 12 Jul 2023 03:57 AM
Last Updated : 12 Jul 2023 03:57 AM

புகார்கள் மீது நடுநிலை நடவடிக்கை: அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபிக்கள் அருண், மகேஷ்குமார் அகர்வால், சஞ்சய்குமார், காவல் ஆணையர்கள் சந்தீப்ராய் ரத்தோர் (சென்னை), அமல்ராஜ் (தாம்பரம்), சங்கர் (ஆவடி) பங்கேற்றனர்.

சென்னை: பொதுமக்களின் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து, நடுநிலையுடன், விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்களே இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, முதல்வரின் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் பெ.அமுதா மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.

டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் ஆணையர் அமல்ராஜ், ஆவடி ஆணையர் சங்கர், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், உளவுப்பிரிவு ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகியோரும் பங்கேற்றனர்.

புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா, டிஜிபியாக சங்கர் ஜிவால் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 6 மாதங்களில் காவல் துறையின் செயல்பாடுகள் மிகமிக திருப்திகரமாக உள்ளன என்றாலும், அடுத்து வரும் ஓராண்டு நமக்கு மிகவும் முக்கியமானதாகும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் கண்டறியப்பட்டதும், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அவை மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் பெரிய நிகழ்வுகளாக உருமாறிவிட கூடாது. அடுத்த ஓராண்டுக்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வண்ணம் உறுதிசெய்ய வேண்டும். மக்களவை தேர்தல் வருவதால் மிக மிக எச்சரிக்கையுடன் அதிகாரிகள் செயல்படவேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களை காவல் நிலையத்தில் விசாரிக்கும்போது, கண்ணியத்துடன் நடத்துவதுடன், எந்த விதத்திலும் துன்புறுத்தக் கூடாது. காவல் மரணங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும்.

கல்விக் கூடங்கள், பணியிடங்கள், பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்கள், பெண்களிடம் இருந்து பெறப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கைஎடுத்து, சட்டத்தின் முன்பு குற்றவாளிகளை நிறுத்தி, அவர்கள் தண்டனை பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். கண்காணிப்பை துரிதப்படுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனையை முற்றிலும் அகற்ற வேண்டும்.

வாரம் தோறும் ஆய்வுக் கூட்டம்: வாரம்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி கண்காணிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நடுநிலை தவறாமல், விருப்பு வெறுப்பின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கேயே பேசி முடித்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

போதை மருந்து நடமாட்டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக இருக்கிறது. ‘எங்கள் மாவட்டத்துக்குள் போதையை முற்றிலும் தடை செய்துவிட்டேன்’ என்று மாவட்ட எஸ்.பி.க்கள் சொல்லும் அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும்.

சாதி, மத ரீதியிலான மோதல்களை தடுப்பதுடன், சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத ரீதியிலான வன்மங்களை பரப்புபவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள்தான் சமூக அமைதி கெட காரணமாக இருக்கின்றனர். இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட, கடந்த மாதத்தைவிட, குற்றம் குறைந்திருக்கிறது என்கிற புள்ளி விவரங்கள் வேண்டாம். குற்றமே நடைபெறவில்லை என்ற முற்றுப்புள்ளி விவரமே தேவை. மாநிலம் முழுவதும் இந்த அறிவுறுத்தல்கள் செயல்படுத்தப்படுவதை உள்துறை செயலர், டிஜிபி இருவரும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x