Published : 12 Jul 2023 03:49 AM
Last Updated : 12 Jul 2023 03:49 AM
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டதை அங்கீகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், அவர் மேற்கொண்ட கட்சி நிர்வாகிகள் நியமனங்களையும் அங்கீகரித்து, அதன் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதிமுகவில் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில், கட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவந்து, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். பின்னர், பழனிசாமி, தேர்தல் மூலம் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றார்.
ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றதையும், பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பழனிசாமி நியமித்த நிர்வாகிகள் குறித்த விவரங்கள், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டன. அதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, ஆணைய இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அதன்படி, கட்சி அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன், துணைபொதுச் செயலாளராக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உட்பட 79 தலைமைக் கழக நிர்வாகிகள், 69 மாவட்டச் செயலாளர்களின் நியமனங்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT