Published : 12 Jul 2023 03:46 AM
Last Updated : 12 Jul 2023 03:46 AM
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் வீடு, மெஸ், நிதி மற்றும் தொழில் நிறுவனங்கள் என 9 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த மே 26-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் ஒருசில இடங்களில் சீல் வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட இடங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஜூன் 23-ம்தேதி 2-வது முறையாக வருமான வரிசோதனை நடைபெற்றது. அப்போதுபல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கரூரில் ஏற்கெனவே சோதனை நடத்திய இடங்கள் உட்பட 9 இடங்களில் நேற்று காலை 9.30 மணி முதல் வருமான வரித் துறையினர் மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி, ஏற்கெனவே சோதனை நடைபெற்ற கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, சின்ன ஆண்டாங்கோவிலில் உள்ள ஸ்ரீ ராமவிலாஸ் வீவிங் ஃபேக்டரி, கரூர் கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி, பாலமுருகா கிரஷர் அலுவலகம், மாயனூர் அருகே எழுதியாம்பட்டியில் உள்ள ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் பண்ணை இல்லம் ஆகிய இடங்களில் 3-வது முறையாகவும், வால்காட்டுபுதூரில் உள்ள கொங்கு மெஸ் மணியின் பண்ணை இல்லம், அதிபர் நிதி நிறுவனம், குறிஞ்சி நிதி நிறுவனம், அதிபர் கேபிட்டல்ஸ் ஆகிய இடங்களில் முதல்முறையாகவும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது, துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT