Published : 12 Jul 2023 03:40 AM
Last Updated : 12 Jul 2023 03:40 AM
சென்னை: டெல்லியில் அட்டர்னி ஜெனரலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அமைச்சர்கள் நியமனம், பதவி நீக்கம், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், சட்ட விதிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவரிடம் இருந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டன. இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதை ஏற்காத ஆளுநர், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்து, முதல்வருக்கு கடிதம்எழுதினார். சிறிது நேரத்தில், அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.
இதுதொடர்பாக மத்திய அரசு தலைமை வழக்கறிஞரிடம் (அட்டர்னி ஜெனரல்) ஆலோசனை பெற்று, நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளதால், தன்னிடம் இருந்து அடுத்த கடிதம் வரும் வரை இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆளுநர் ரவி ஒரு வார பயணமாக கடந்த 7-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைஅவர் நேற்று முன்தினம் சந்தித்துபேசினார். பிறகு, பல்வேறு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணியை ஆளுநர் ரவி நேற்றுசந்தித்து பேசினார். பொதுவாக அமைச்சர்கள் நியமனம், பதவிநீக்கம் உள்ளிட்டவை குறித்தும், குறிப்பாக, செந்தில் பாலாஜி விவகாரத்திலும் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், இதுபற்றிய சட்ட விதிகள் குறித்து அட்டர்னி ஜெனரலிடம் அவர் ஆலோசனை பெற்றுள்ளார். மத்திய சட்ட அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்துவிட்டு, 2 நாட்களில் அவர் தமிழகம் திரும்புவார் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT