Published : 12 Jul 2023 05:35 AM
Last Updated : 12 Jul 2023 05:35 AM
சென்னை: டெல்லியில் வரும் 18-ம் தேதி நடைபெறும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக கூட்டணி கட்சித் தலைவர்களான பழனிசாமி, அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகியோருக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தங்களைத் தயார்படுத்தும் பணிகளையும், கூட்டணி அமைக்கும் பணிகளையும் தொடங்கிவிட்டன.
கட்சிகள் தீவிரம்: பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பின் பேரில் ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எதிக்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வியூகங்கள் வகுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
இதற்கிடையே வரும் 17, 18-ம் தேதிகளில் பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் 2-வது கூட்டத்தை நடத்த மல்லிகார்ஜுன கார்கே திட்டமிட்டுள்ளார். அதற்காக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது பாஜகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு இல்லை: இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் உடனான ஒருங்கிணைப்புக் கூட்டத்தை டெல்லியில், வரும் 18-ம் தேதி பாஜக நடத்துகிறது. இதற்காக அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு வரவில்லை. இது அவரது தரப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியூகங்கள் அமைக்க திட்டம்: இக்கூட்டத்தில் பழனிசாமி உறுதியாகப் பங்கேற்பார் என, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஜி.கே.வாசனும் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இக்கூட்டத்துக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மேற்கொண்டு வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுக்க அமைக்க வேண்டிய வியூகங்கள் தொடர்பாக விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் அதிமுக - பாமக இடையே சுமுகமான உறவு இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, நேற்று முன்தினம் வெளியிட்ட தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பான அறிக்கையில் கூட, பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாமக என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக ‘அரசியல் கட்சியைச் சேர்ந்த நகர செயலாளர் கொலை’ என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் டெல்லி யில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT