Published : 12 Jul 2023 06:07 AM
Last Updated : 12 Jul 2023 06:07 AM

வருமானத்துக்கு அதிகமாக ரூ.127 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது 810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜூக்கு எதிராக திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 810 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்.

திருவாரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.127.49 கோடி சொத்து சேர்த்ததாக திருவாரூர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு போலீஸார் நேற்று 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் உணவுத் துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது வீடு மற்றும் தமிழக முழுவதும் உள்ள அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் உட்பட 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 1.4.2015 முதல் 31.3.2021 வரை அமைச்சராக ஆர்.காமராஜ் பதவி வகித்தபோது, அவரது பெயரிலும், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவர்களின் நண்பர்கள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் உதயகுமார் ஆகியோரது பெயர்களிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 மதிப்பிலான சொத்து சேர்த்ததாக கடந்த 7.7.2022 அன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு குறித்து விசாரணை நடந்தி வந்தபோது, முன்னாள் அமைச்சர் காமராஜின் சொத்து விவரம் குறித்து சோதனை நடத்தப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது, தஞ்சாவூரில் என்ஏஆர்சி ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்துகளை வாங்கி, அந்த இடத்தில் அவரது மகன்களான இனியன், இன்பன் ஆகியோரது பெயர்களில், ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் என்ற ஒரு நவீன பன்னோக்கு மருத்துவமனை கட்டியது உட்பட பல்வேறு வகைகளில் ரூ.127.49 கோடியை தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கில், புலன் விசாரணை தற்போது முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டப் பேரவை தலைவரிடம் அனுமதி பெற்று, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை சிறப்பு நீதிமன்றத்தில் காமராஜ் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் 1988 மற்றும் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் படி உரிய பிரிவுகளின் கீழ் நேற்று 810 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x