Last Updated : 11 Jul, 2023 07:05 PM

 

Published : 11 Jul 2023 07:05 PM
Last Updated : 11 Jul 2023 07:05 PM

சிவகங்கை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு; 19 பேர் காயம்

சிவகங்கை அருகே முளைக்குளம் என்ற இடத்தில் விபத்துக்களான பள்ளி வாகனம், உயிரிழந்த மாணவர் ஹரிவேலன்.

சிவகங்கை: சிவகங்கை அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஆசிரியர் உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை அருகே பெரியகோட்டையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பெரியகோட்டை, பச்சேரி, வேம்பத்தூர், மிக்கேல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை அப்பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் சென்றது. வாகனத்தை சுரேஷ் (27) என்பவர் ஓட்டினார். முளைக்குளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 7-ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் (13) உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மேலும் மிக்கேல்பட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியர் நித்யா (31), மாணவர்கள் பச்சேரியைச் சேர்ந்த தர்ஷினி (14), மகேஸ்வரி (13), சண்முகபிரியா (7), வேம்பத்தூரைச் சேர்ந்த கமலேஸ்வரன் (8), முகேஷ் (14), கவுதம் (7), சாய் (7), மிக்கேல்பட்டினத்தைச் சேர்ந்த இன்பன்ட் மைக்கேல் (14) உட்பட 19 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

மேலும் வெள்ளைச்சாமி, கற்பகம் தம்பதியினருக்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்த ஹரிவேலன் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சாலையோரம் மண் அணைக்காததால் விபத்து: சாலை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் குறிப்பிட்ட அளவுக்கு மண் அணைக்க வேண்டும். ஆனால் மண் அணைக்கவில்லை. இதனால் சாலையோரத்தில் வாகனம் சென்றபோது, தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

தனியார் பள்ளி மீது நடவடிக்கை; ஆர்டிஓ உறுதி: இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறுகையில் ''விபத்துக்குள்ளான பள்ளி வாகனம் அனுமதி பெறாமலேயே இயக்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் குறித்த விபரமும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x