Published : 11 Jul 2023 06:36 PM
Last Updated : 11 Jul 2023 06:36 PM
சிவகங்கை: மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், எம்பி வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். காளையார்கோவிலில் 3 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் பஞ்சாலையை மத்திய அரசு திறக்க வேண்டும். காளையார்கோவில் ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். காளையார்கோவில், நாட்டரசன்கோட்டையை சுற்றுலாத் தலமாக அறிவித்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் வெங்கடேசன் எம்.பி கூறியதாவது: ''சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை விவாதிப்பதுதான் நல்ல எதிர்க்கட்சிகளின் செயல்பாடாக இருக்க வேண்டும். மணிப்பூர் கலவரத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுநர் அரசியலை திசை திருப்பவும், மாண்புகளை கெடுக்கவும் முயற்சிக்கிறார். தமிழகம் அதை ஏற்றுக் கொள்ளாது. மூத்த குடிமக்களின் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளின் நலத்திட்ட உதவிகள் போன்ற நலத்திட்டங்களை பறித்த பாஜகவில் இருக்கும் அண்ணாமலைக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பேச தகுதியில்லை'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT